Tamilnadu Covid Vaccination Update : தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதலில் தடுப்பூசி குறித்து பல வதந்திகள் பரவினாலும், கடந்த சில மாதங்களாக மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். இதில் திரை பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக லைதங்களில் தங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இளைஞர்கள் பலரும் ஆவமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை ஒரு கோடிக்கு அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமம் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட தமிழ்நாட்டின் முதல் கிராமம் என்று சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இந்த சிறிய விவசாய கிராமத்தில் 3,332 மக்கள் வசிக்கின்றனர். இதில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்களைத் தவிர்த்து, தடுப்பூசி போட தகுதியான நபர்கள் பட்டியலில் 2,334 பேர் இருந்தனர். இதனையடுத்து இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசியின் ஒரு டோஸை எடுத்துக்கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் கிராமமாக காட்டூர் கிராமம் பெயர்பெற்றுள்ளது.
மேலும் முன்னாள் முதல்வர் எம் கருணாநிதியின் தாய் அஞ்சுகத்தின் சொந்த ஊரான இந்த கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக ஒரு அருங்காட்சியகம் கட்டுப்பட்டு வருகிறது. இந்திய அளவில் இம்மாத தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாண்டிபோரா மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான வெயான், கிராமத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக சுகாதார அதிகாரிகள், அறிவித்திருந்தனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மூன்றாவது அலைக்கு முன்னதாக அடுத்த சில வாரங்களில் இந்தியா முழுவதும் பழங்குடியினர், தேயிலை தோட்டங்களின் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் வசிப்பவர்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களில் 100% தடுப்பூசி செலுத்துவதை தமிழகம் உறுதி செய்யும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மரபணு மாறுபட்ட டெல்டா பிளஸ் மாறுபாட்டிலிருந்து கிளஸ்டர்களை கண்டறியப்படவில்லை என்றும், மாறுபாட்டைக் கொண்டிருந்த சென்னை செவிலியர் ஒருவர் குணமடைந்து தற்போது பணியில் சேர்ந்துள்ளார் என்றும், அவர் சில வாரங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்வார் என்று அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.