/tamil-ie/media/media_files/uploads/2021/06/children22.jpg)
Tamil Nadu covid19 news : கொரோனா இரண்டாம் அலையில் பெரும் மனித இழப்புகளை நம்முடைய நாடு கண்டு வருகிறது. தமிழகத்தில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், இழப்பு எண்ணிக்கை முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையில் கூடுதலாக இருக்கிறது. சமீபத்தில் கொரோனாவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
இதுவரை வந்த தகவல்களில் 1400 குழந்தைகள் தங்களின் பெற்றோர்களை இழந்துள்ளனர். 50 குழந்தைகள் வரை தங்களின் தாய் மற்றும் தந்தையை இழந்துள்ளது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 1, 2020 முதல் ஜூன் 5 2021 வரை நாடு முழுவதும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் குழந்தைகள் தங்களின் ஒன்று அல்லது இரண்டு பெற்றோர்களையும் இழந்துவிட்டதாக கூறியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழகத்தில் 802 குழந்தைகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மாநில மற்றும் மத்திய அரசின் தரவுகள் முரண்பட்டதாக உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இது போன்ற பெற்றோர்களை இழந்த குழந்தைகளை ஆணையத்தின் முன் சமர்பிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் தகவல்களை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தங்களில் மாநில அரசு பதிவேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. குழந்தைகளின் தகவல்கள் கிடைத்தால் மட்டுமே அவர்களுக்கான உதவிகளை வழங்கி அவர்களின் குடும்பத்தை வலுவாக்க முடியும். இல்லையென்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்படும் நிலை உருவாகலாம் என்று ஆணையத்தின் தலைவர் ப்ரியங்க் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மரணித்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கான நலத்திடங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.