அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டியிருக்கும் காசா கிராண்ட் மற்றும் மாதா பொறியியல் கல்லூரி கட்டிடங்களை இடிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கிட்டு, அவற்றை அகற்றி அகலப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரை பகுதியில் பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அனகாபுத்தூரில் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி. ஆர் நகர் பகுதிகளில் அடையார் ஆற்றை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளது.
சுமார் 593 வீடுகள் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வருவதால், அங்கு வசிப்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 6 நாட்களாக ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிகள், தாம்பரம் மாநகராட்சி ஆணையர், பல்லாவரம் தாசில்தார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. தற்போது வரையில், சுமார் 450-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அங்கு வசித்து வந்தவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு சார்பில், பெரும்பாக்கம், கீரப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டு அப்பகுதிகளுக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து, மீதமுள்ள வீடுகளை இடிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அனகாபுத்தூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அனகாபுத்தூர் சென்று மக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அனகாபுத்தூருக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், குடியிருப்புகளை அப்புறப்படுத்தாமல் மக்கள் அங்கேயே வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக தலைமைச் செயலாளரை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பணக்காரர்களைக் கண்டால் தமிழக அரசு பதுங்கி கிடப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளப் பதிவில், ”அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டியிருக்கும் காசா கிராண்ட் மற்றும் மாதா பொறியியல் கல்லூரி கட்டிடங்களை இடிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? ஏழைகளுக்கு எதிராக புல்டோசர்களை நிறுத்தும் அரசு பணக்காரர்களைக் கண்டால் பதுங்கி கிடப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.