/indian-express-tamil/media/media_files/2025/05/28/kC1BgBm1iERqYYlWNaV4.jpeg)
திண்டிவனத்தில் நடைபெற்ற கட்சியின் வட்ட செயலாளர் திருமணத்தில் கலந்துக் கொண்ட சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இனி வருங்காலங்களில் அரிசி கொண்டு வாழ்த்துவதைத் தவிர்த்து, பூக்களை கொண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டிவனத்தில் கட்சியின் வட்ட செயலாளர் ஏ.கண்ணதாசன்- சரிதா ஆகியோர் திருமணத்தை தலைமை தாங்கி, சடங்கு இல்லா திருமணமாக தாலியை எடுத்துக் கொடுத்து சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இங்கு மற்ற தலைவர்களோட வாழ்த்துதல்களோடு எனது வாழ்த்துக்களையும் மணமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு அக்னி கிடையாது, ஐயர் கிடையாது, மந்திரம் கிடையாது, மாலை மாற்றிக் கொண்டு, தாலி கட்டிக் கொண்டு இந்த திருமணம் சில நிமிடங்களில் நடந்து முடிந்திருக்கிறது என பலருக்கும் தோணும், இது மாதிரியான திருமணம் செல்லுபடி ஆகுமா, ஆகாதா என தோன்றலாம், இது மாதிரியான சமூக சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படியாக செல்லும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஐயர் வைத்து, சடங்கு முறைகளோடு திருமணம் நடந்தால் தான் திருமணம் ஏற்றுக்கொள்ளப்படும் என இன்னும் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இது மாதிரியான சீர்திருத்த திருமணங்கள் செல்லும் என்ற சட்டங்கள் பல்லாண்டு காலம் நடைமுறையில் இருந்தாலும் இது மாதிரி சீர்திருத்த திருமணங்கள் நடப்பது மிக மிக குறைவு என்பதை முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வீட்டு திருமணங்களில் கூட பல திருமணங்களில் என்னை அழைத்து இருக்கிறார்கள். அங்கே ஐயரையும் அழைத்து இருக்கிறார்கள். அப்போது என்னை அழைத்து உள்ளீர்கள், ஐயரையும் அழைத்து உள்ளீர்களே என கேட்டால் ஏதாவது ஒரு குடும்பத்தின் மீது காரணத்தைச் சொல்லி ஐயரும், நானும் இருப்பது மாதிரி திருமணங்கள் நடக்கிறது.
இங்கு ஐயர் மற்றும் சடங்குகள் இல்லாமல் முழுக்க முழுக்க கட்சியினருடைய வாழ்த்துக்களோடு இந்த திருமணம் நிறைவேறி இருக்கிறது. இது மாதிரி திருமணம் செய்து கொண்டவன் தான் நான். இது மாதிரி திருமணம் செய்து கொண்டவர்கள் நல்லா இருக்க முடியுமா என்று சந்தேகங்கள் உறவினரிடத்தில் வரலாம். இங்கிருக்கும் தோழர்கள் ரவீந்திரன், சாமுவேல்ராஜ் போன்ற தலைவர்களும் இது மாதிரி திருமணம் செய்தவர்கள் தான். நாங்களும் குழந்தை குட்டிகள் பெற்று பேரன் பேத்திகள் எடுத்து நல்ல முறையில் தான் இருக்கிறோம். அதன்படி கண்ணதாசன் - சரிதா மிகச் சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள் என கட்சியின் சார்பில் உறுதியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்றவர்கள் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வது சாதாரண விஷயம் கிடையாது. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கக் கூடிய காலத்தில் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தோழர் கண்ணதாசன். கட்சியின் முழு நேர ஊழியருக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை, அதனை ஒரு வேலையாகவும் ஏற்றுக் கொள்வதுமில்லை இதனை ஏற்று பெண் கொடுத்த சரிதா வீட்டினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உற்றார், உறவினர்கள் கூட ஏற்றுக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த உத்தரவாதமும் இல்லாத சூழ்நிலையில் இருதரப்பு குடும்பத்தின் சம்மதத்தோடு இந்த திருமணம் நடந்து கொண்டிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த திருமணத்தில் பூ போட்டு தான் வாழ்த்துகிறோம். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், நீண்ட காலமாக திருமணங்களில் அரிசியை போட்டு தான் வாழ்த்துவார்கள். வாழ்த்துகிறார்கள், மணமக்களை வாழ்த்துவதற்கான அடையாளமாக அரிசி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 60- ஆயிரம் கல்யாணம் நடக்கிறது, அதில் வாழ்த்துவதற்கு இரண்டு கிலோ அரிசி என்று வைத்துக் கொண்டாலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கிலோ அரிசி கீழே வீசி, காலில் மிதிபட்டு வீணாகிபோகிறது. இது ஒரு நாள், இரண்டு நாள் மட்டும் அல்ல, வருடந்தோறும் நடைபெறும் திருமணங்களை யோசித்துப் பாருங்கள். ஒரு திருமணத்திற்கு இரண்டு கிலோ அரிசி என்றால் எத்தனை டன் அரிசி மணமக்களை வாழ்த்துகிறோம் என்ற பெயரில் கீழே வீசி வீணாக்கப்படுகிறது. நாம் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்,
மணமக்கள் மீது மலர்களைப் போட்டாலும், அரிசியை போட்டாலும் வாழ்த்துக்கள் தான் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் மலர் கசங்கி சில நாட்களில் சருகாவிடும். ஆனால் காலில் மிதிப்பட்டு அரிசி வீணாகிப் போகிறது. இந்தியா போன்ற நாட்டில் பல்லாயிரக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் உணவுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இது மாதிரி ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான டன் அரிசி வீணாகிப் போவதை ஏற்றுக்கொள்ள முடியாது, எந்த விதத்திலும் நியாயப்படுத்தவும் முடியாத நிகழ்வு என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஆகையால் இனிமேல் திருமண நிகழ்வுகளில் பெற்றோர்களாக இருந்தாலும் சரி, இளைஞர்களாக இருந்தாலும் சரி வாழ்த்துகிறோம் என்ற பெயரில் இனி அரிசியை வீணாக்கும் காரியத்தை தயவு செய்து மேற்கொள்ளாதீர். மலர்கள் மூலமாகவே உங்கள் வாழ்த்துக்கள் மணமக்களுக்கு போய் சேரும். அப்படி ஒரு மாற்றத்தை ஒவ்வொரு குடும்பத்திலும் நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதை நான் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
சீர்திருத்தத் திருமணம், சுயமரியாதை திருமணம் எல்லாமே சரிதான் ஆனால் காதல் திருமணங்கள் அதிகமாக நடைபெற வேண்டும். சாதி மறுப்பு திருமணங்கள் சமூகத்தில் அதிகமாக நடைபெற வேண்டும். ஜாதி ஒழிய வேண்டும், தீண்டாமை கொடுமைகள் ஒழிய வேண்டும், என்றால் காதல் திருமணங்களும் ஜாதி மறுப்பு திருமணங்களும் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக நடைபெறுகிறதோ அதைப் பொறுத்து தான் இந்த மாற்றங்கள் இருக்கும். அதுவே ஜாதி ஒழிப்பில் நாம் முடிவு கொள்வதற்கான சிறந்த வழியாக இருக்கும். அத்தகைய திருமணங்களுக்கு பக்க பலமாக இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை நான் பெருமையாக சொல்லிக் கொள்கிறேன், அத்தகைய சாதி மறுப்பு திருமணங்களை பெற்றோர் சம்மதத்தோடு நாங்கள் நடத்தி வைக்க முயற்சிக்கிறோம். ஜாதி பிடிவாதத்தால் பெற்றோர் சம்மதம் இல்லாமல் அத்தகைய ஜாதி மறுப்பு திருமணங்களும் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
என்னுடைய திருமணமே ஜாதி மறுப்பு திருமணம் தான் என்னுடைய இரண்டு மகன்களின் திருமணமும் ஜாதி மறுப்பு திருமணம் தான், ரெண்டு பேர குழந்தைகள் இருக்கிறார்கள். அந்தப் பேர குழந்தைகள் ஜாதி என்னவென்று யாராலும் சொல்ல முடியாது. என் பேரக் குழந்தைகளின் ஜாதி சொல்லப்போனால் உங்கள் பாஷையில் பலபட்டறை, அப்படித்தான் நீங்க சொல்ல முடியும். இது போன்ற முன்னெடுப்புகள் நம் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும். சமூகத்திற்கு உபதேசம் செய்வது, மற்றவர்கள் இது போன்று நடந்து கொள்ள சொல்வது, நம்முடைய குடும்பங்களில் நம்முடைய பேரக்குழந்தைகளுக்கு இது போன்ற ஜாதி மறுப்பு திருமணங்கள் நடத்துவதின் மூலமாக தெரியவரும்.
தற்போது கேரளாவில் இதுபோன்ற சமூக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. பைத்தியக்கார தேசம் என விவேகானந்தரால் வர்ணிக்கப்பட்ட, பேசப்பட்ட கேரளத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. அங்கு யார் என்ன ஜாதி என்று பார்த்து திருமணம் செய்து கொள்வதில்லை. இன்று அங்கு மிகப்பெரிய மாற்றமாக பையனுக்கும் பொண்ணுக்கும் பிடிச்சிருக்கா, இரண்டு குடும்பத்துக்கும் ஒத்துப் போகுதா என்று பார்க்கிறார்களே தவிர ஜாதி பார்ப்பதில்லை. என்ன ஜாதி என்பதை அடியோடு ஒழித்து விட்ட ஒரு மாநிலமாக, ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கேரளம் ஏற்படுத்தி இருக்கிறது.
நிறைய சமூக சீர்திருத்தவாதிகள் உருவாகிய, உருவாகியுள்ள தமிழகத்தில், முற்போக்கு பேசக்கூடிய தமிழகத்தில், கேரளத்தை போன்று அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று உங்களிடத்தில் கேட்டுக் கொண்டு மணமக்களை மாநிலக்கழு சார்பில் மீண்டும் முயற்சிக்கவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு பெ.சண்முகம் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.