Tamil Nadu Coronavirus Daily Bulletin sep 09: தமிழகத்தில் மேலும் 5,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,80,524 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
குணமடைவோர் விகிதம்: கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களில் இன்று மட்டும் 6,516-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை 4,23,231-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88.08 விழுக்காடாக உள்ளது .
தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 49,203 ஆக உள்ளது.
இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட்-19 தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கொரோனா நோய் தொற்றுக்கு மருந்தே கண்டுபிடிக்காத சூழ்நிலையிலும் மருத்துவ துறையினரின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக ஏராளமானோர் குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார். இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உயிரிழப்பு நிலவரம் : இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றினால் 78 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 21 பேரும், அரசு மருத்துவமனையில் 57 பெரும் இதில் அடங்குவர். கொரோனா தொற்றால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,090-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரிசோதனை: தமிழகத்தில் இன்று மட்டும் 80,401 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது. கோவிட்-19 க்கான பரிசோதனை இதுவரை 53,66,224 பேருக்கு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை நிலவரம்: சென்னையில் இன்று மட்டும் 993 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கு, இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,44,595 ஆக அதிகரித்துள்ளது.
மற்ற மாவட்டங்களின் நிலவரம்:

சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 445, கடலூர் – 344, திருவள்ளூர் – 281 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89,706 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 8,97,394. சிகிச்சை பெறுபவர்களில் 61%பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் உள்ளனர் என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.