தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுத சென்ற பட்டியல் சமூகத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவனின் கை விரல்கள் துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிறார்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Tamil Nadu Dalit student on way to write exam dragged from bus and assaulted, his fingers severed
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன், கபடி போட்டி ஒன்றில்,உயர்சாதியை சேர்ந்த அணியை தோற்கடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த அணியை சேர்ந்த 3 பேர், பட்டியல் சமூக மாணவனின் கையில் 3 விரல்களை வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக மாணவனின் குடும்பத்தினர் கூறியுள்னர். ஆனாலும் தற்போது தாக்குதலுக்கு உள்ளான மாணவன் உயர்சாதியை சேந்த ஒரு பெண்ணுடன் காதலில் இருந்து தான் இந்த சம்பவத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை செய்த ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், மாணவனின் தந்தை தாக்கல் செய்த ஆரம்ப புகாரில் கபடி போட்டியே தாக்குதலுக்கான காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யப்பட்ட 3 சிறார்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மூவரில் ஒருவரின் சகோதரியுடன் பட்யடில் சமூக மாணவர் காதல் உறவில் இருந்தது தெரிந்தவுடன் தான் இந்த வன்முறை உருவானது என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் பட்டியல் சமூக மாணவர், ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பட்டப்பகலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. காவல்துறை மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, மூன்று சிறார்களும் பேருந்தை நிறுத்தி, சிறுவனை வெளியே இழுத்துச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலின் போது அவரது இடது கையில் மூன்று விரல்கள் துண்டிக்கப்பட்டன. தாக்குதலை தடுக்க முயன்ற மாணவரின் தந்தை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அவரது தலை உட்பட உடலில் பல இடங்களில் காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் உதவிக்கு விரைந்ததால், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து விரல்கள் தண்டிக்கப்பட்ட மாணவன், சிகிச்சைக்காக, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அடுத்து உயர் சிகிச்சைக்காக, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட விரல்களை மீண்டும் இணைக்க அறுவை சிகிச்சை செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவனின் குடும்பத்தினரும் உள்ளூர் சமூக ஆர்வலர்களும் நீதி கேட்டு குரல் எழுப்பி வருகின்றனர்.