திருச்சியில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டும்; டெல்டா எம்.பி.,க்கள் கூட்டாக மனு

திருச்சி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம், கூடுதல் பன்னாட்டு விமானச் சேவைகள்; மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து டெல்டா எம்.பி.,க்கள் கோரிக்கை

திருச்சி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம், கூடுதல் பன்னாட்டு விமானச் சேவைகள்; மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து டெல்டா எம்.பி.,க்கள் கோரிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
delta mps

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு நேரடி விமான சேவைகளை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் திருச்சி எம்.பி துரை வைகோ, பெரம்பலூர் எம்.பி கே.என்.அருண் நேரு, ராஜ்யசபா எம்.பி எம்.எம்.அப்துல்லா, கரூர் எம்.பி செ.ஜோதிமணி, தஞ்சாவூர் எம்.பி முரசொலி ஆகியோர் கூட்டாக சென்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

Advertisment

இது தொடர்பாக துரை வைகோ எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கை: பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, ராஜ்யசபா எம்.பி எம்.எம்.அப்துல்லா, கரூர் எம்.பி செ.ஜோதிமணி, தஞ்சாவூர் எம்.பி முரசொலி ஆகியோருடன் நானும் இணைந்து சென்று, நேரில் சந்தித்து திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம்.

நாங்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில், திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய கட்டிடத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக பயன்பாட்டிற்கு வந்தது. கூடுதல் பயணிகளின் வருகைக்காகவே இந்தப் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. 

Advertisment
Advertisements

கூடுதல் விமான சேவைகள் வழங்கப்பட்டால் மட்டுமே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதற்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போதிய ஓடுதள வசதி இல்லை. ஆகவே, விமான ஓடுபாதை விரிவாக்கப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க தேவையான நிதியை வழங்குமாறு கோரிக்கை வைத்தோம். 

இரண்டாவதாக, இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் (BASA) படி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை வழங்கிட அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மட்டுமே துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படுகிறது. வாராந்திர சேவை அடிப்படையில் ஒரு வாரத்திற்கு 3760 இருக்கைகள் மட்டுமே இந்த விமானத்தில் நிரப்பப்படுகின்றன. இதனால் பயணக் கட்டணமும் பல மடங்கு அதிமாக உள்ளது. ஆகவே, வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர் பெங்களூர், சென்னை, கொச்சின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமான சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால், திருச்சி விமான நிலையத்திற்கு வர வேண்டிய வருவாய் பெங்களூர், கொச்சின் போன்ற விமான நிலையங்களுக்குச் சென்று விடுகின்றன. 

எனவே, திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் பயனடைவதோடு திருச்சி விமான நிலையத்திற்கு வருவாயும் அதிகரிக்கும் என, கோரிக்கை வைத்தோம். 

அதே போல, திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இல்லை. ஆகவே, டெல்லியில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து கொச்சினுக்கும் விமானங்களை இயக்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால், திருச்சி மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட அருகாமை மாவட்ட மக்களுக்கும் பெரும் பயன் விளைவிப்பதாக இருக்கும். 

மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவின் தந்தை காலஞ்சென்ற கிஞ்சராபு எர்ரான் நாயுடு, வைகோவின் நெருங்கிய நண்பர் ஆவார். அமைச்சர் ராம்மோகன் நாயுடு, வைகோ உடல் நலத்தை மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்ததோடு, அவர் டெல்லிக்கு வரும்போது நேரில் வந்து சந்திக்கிறேன் எனவும் தெரிவித்தார். திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக நாங்கள் தெரிவித்த கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார் என துரை வைகோ தெரிவித்துள்ளார். 

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: