/indian-express-tamil/media/media_files/2025/01/28/PfK8UVbA7YrFyotKWhYd.jpeg)
ஜாதி மதத்தை கடந்து இந்தியாவின் குடிமகன் என்று அனைவரும் ஒரே இடத்தில் கூடி உள்ளீர்கள், மனிதர்கள் வேறுபாடு பார்க்காமல், ஒன்று கூடி வாழ வேண்டும் என்பதுதான் கலைஞரின் குறிக்கோள் என சாரணர் சாரணியர் விழாவில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளவாய்ப்பட்டியில் உள்ள சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி மாநாடு சிறப்பு 'ஜாம்புரி' என்ற பெயரில் இன்று (28ம் தேதி) மாலை துவங்கியது.
‘அதிகாரம் பெற்ற இளைஞா்கள், வளா்ந்த இந்தியா' என்ற கருப்பொருளைக் கொண்டு பாரத சாரணா் இயக்கத்தின் பெருந்திரளணி விழாவை நிகழ்வின் தலைவரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைத்து, கலைஞர் நூற்றாண்டு நினைவு புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து சிறப்பித்தார்.
வைர விழா பெருந்திரளணி குறித்த சிறப்பிதழ் மற்றும் அஞ்சல் உறையை துணை முதலமைச்சர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சிறப்பு கையேட்டினை வெளியிட்டார்.
விழா பிப்ரவரி 3 ஆம் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சாரணர் இயக்கத்தை சேர்ந்த 25,000 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது வழிகாட்டிகள் பங்கேற்கின்றனர். இதற்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் நேற்று முதல் சிப்காட் வளாகத்துக்கு சாரண மாணவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். வடமாநில சாரண சாரணியர் கடந்த 2 நாட்களாக குவிந்து வருவதால் சிப்காட் வளாகமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
சிப்காட் வளாகத்தில் மாணவ, மாணவிகள் தங்குவதற்காக கூடாரங்கள். கழிவறை மற்றும் குளியலறை, கருத்தரங்குகள் நடத்துவதற்கான கூட்டரங்கு, உணவு தயாரிப்பு கூடங்கள், அமர்ந்து சாப்பிடுவதற்கான அறைகள், மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாரண மாணவர்கள் 7 நாட்கள் தங்கியிருந்து தங்களது கலை உணர்வுகள், விளையாட்டு, அறிவுத்திறன்களை வெளிப்படுத்துகின்றனர். மேலும், அவர்களது திறமையை சோதிக்கும் வகையில் தனித்திறன், குழுத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
சிறப்பு விருந்தினராக உலக அளவில் சாரணர் இயக்கத்தை தோற்றுவித்த பேடன் பவலின் வழித்தோன்றல்களில் ஒருவரான டேவிட் பேடன் பவல் ஆஸ்திரேலியாவில் இருந்து பங்கேற்றார். மேலும், விழாவிற்கு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய முதன்மை ஆணையர் முனைவர் கே.கே.கண்டேல்வால் (ஓய்வு) மற்றும் இயக்கத்தின் தலைவர் முனைவர் அனில்குமார் ஜெயின், தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில், வைரவிழாவின் துணைத் தலைவர்களும், அமைச்சர்களுமான கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரை வைகோ, ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரராஜன், பழனியாண்டி, முத்துராஜா, அப்துல் சமது, பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் மதுமதி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சாரண சாரணியர் பங்கேற்றதால் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
2000 ஆம் ஆண்டு தான் கலைஞர் ஆட்சி காலத்தில் 50 ஆவது ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. நம்முடைய முதலமைச்சர் ஆட்சியில் வைர விழா நடக்கிறது, 39 கோடியை அரசு இந்த நிகழ்ச்சிக்கு ஒதுக்கியது. 3 மாதங்களாக அன்பில் மகேஷ் இந்த பணியை செய்து வருகிறார், சமீபத்தில் ஸ்கவுட் டிரஸ்சில் அமைச்சர் வந்தார், இந்த நிகழ்ச்சியோடு அவர் ஒன்றி போய்விட்டார்.
தமிழ்நாடு கலாச்சார பாரம்பரியங்களை தெரிந்து கொள்ள உங்களுக்கு இந்த நிகழ்ச்சி உதவியாக அமையும், அதேபோல் மற்ற மாநில கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்ள உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் படிப்பை தவிர சிறந்த முறையில் வாழ்க்கையை கற்று கொள்ள உதவும், இது மாதிரியான அனுபவம் கிடைப்பது விலை மதிப்பில்லாத கிடைக்காத சொத்து.
ஜாதி மதத்தை கடந்து இந்தியாவின் குடிமகன் என்று அனைவரும் ஒரே இடத்தில் கூடி உள்ளீர்கள், மனிதர்கள் வேறுபாடு பார்க்காமல், ஒன்று கூடி வாழ வேண்டும் என்பதுதான் கலைஞரின் குறிக்கோள். பெரியார் சமத்துவபுரம் திட்டம் ஒருவர் சிறந்த திட்டம். அனைவரும் ஒன்றாக கூடி வாழ வேண்டும் என்பதுதான் பெரியார் சமத்துவபுரம் திட்டம், கலைஞர் நூற்றாண்டு விழாவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதில் தமிழ்நாட்டிற்கு பெருமை, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் என்னுடைய வாழ்த்துகள் எனப் பேசினார்.
முன்னதாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாவது; தமிழ்நாடு பண்டைய நாகரிகம், பாரம்பரியம், அமைதி மற்றும் எல்லையில்லா அன்பின் பூமி. தமிழகம் வந்துள்ள அனைத்து சகோதர சகோதரிகளையும் அன்புடன் வரவேற்கிறேன்.
தமிழக மக்கள் கலாச்சாரம் மட்டுமின்றி அறிவியல் தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்குகின்றனர். சமீபத்தில் நமது முதலமைச்சர் 5,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்புப் பயன்பாடு அதிகமாக இருந்தது என்பதை அறிவியல் சான்றுகளின் மூலம் உலகுக்குப் பெருமையுடன் அறிவித்தார்.
மீண்டும் ஒருமுறை, இந்த மகத்தான மற்றும் பெருமைமிக்க மண்ணை உங்கள் மதிப்பிற்குரிய இருப்புடன் கௌரவித்த உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த நேரத்தில், நமது தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் நம்மை இன்று இருக்கும் நிலைக்கு உருவாக்கித் தந்ததற்கு நினைவு கூர்கிறேன்.
நவீன தமிழ்நாட்டின் சிற்பியான கலைஞர் பாரத சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் பொன்விழா கொண்டாட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்தார். அவரது பாரம்பரியத்தையும், அவர் வகுத்த பாதையையும் பின்பற்றி, இந்த வைரவிழா நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஆதரவையும் ஊக்கத்தையும் நமது முதலமைச்சர் வழங்கி வருகிறார். முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கலாசாரம், அறிவியல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, சாரணர் மற்றும் வழிகாட்டி சேவையிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. சாரணர் இயக்கம் 1907 இல் இங்கிலாந்தில் பேடன் பவல் பிரபுவால் நிறுவப்பட்டது. இது படிப்படியாக உலகம் முழுவதும் பரவியபோது, தமிழ்நாடு 1919 ஆம் ஆண்டிலேயே சாரணர் இயக்கத்தை ஏற்றுக்கொண்டது, இது பல பகுதிகளை விட மிகவும் முன்னதாகவே ஏற்றுக் கொண்டது. முதலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாரணர் இயக்கங்கள் நிறுவப்பட்டு மண்டல அளவில் செயல்படத் தொடங்கின. பலர் இந்த இயக்கத்தில் ஆர்வத்துடன் இணைந்து மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவை செய்யத் தொடங்கினர்.
1929 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள பிர்கன்ஹெட் அரோவ் பூங்காவில் நடைபெற்ற உலக ஜாம்போரியில் தமிழ்நாடு சாரணர்கள் கலந்து கொண்டனர். சாரணர் இயக்கத்தின் மீது தமிழ்நாடு காட்டிய ஆழ்ந்த அர்ப்பணிப்பை காட்டுகிறது.
இயக்கத்தின் நிறுவனர், லார்ட் பேடன் பவல், சிறுவர்களுக்கான சாரணர் என்ற புத்தகத்தை எழுதி, அதை பரவலாக விநியோகித்தார். இந்த புத்தகம் அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது, ஆனால், அது தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் இந்நூலின் தமிழாக்கம் செய்யப்பட்டது.
பாரத சாரணர் மற்றும் வழிகாட்டி வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு ஜம்போரி உங்களுக்கு சிறந்த அனுபவம். கலந்து கொள்ளும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் பொன்விழாவை கலைஞர் தமிழ்நாட்டில் மிகப் பிரமாண்டமாக நடத்தினார். அப்போதைய கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் சென்னையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சாரணர் இயக்கத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் முழு தேசத்தின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் நடைபெறுவதை கலைஞர் உறுதி செய்தார். அந்த வரலாற்றுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, தற்போதைய கழக அரசு இந்த வைர விழா நிகழ்ச்சியை நடத்துகிறது என தெரிவித்தார்.
முன்னதாக, மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில் நாடு முழுவதிலிருந்தும் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.