ஆப்பிரிக்கா நாட்டுக்கு அரிய வகை கெமிக்கல் தேவைப்படுவதாக கூறி இணையதளம் மூலம் மோசடி நடக்கிறது என தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், திருப்பூரைச் சேர்ந்த சில தொழிலதிபர்களுக்கு ஒரு மெயில் வந்தது. அதில் நீங்கள் தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். எங்களுடைய ஆப்பிரிக்கா நாட்டிற்கு ஒரு கெமிக்கல் தேவைப்படுது. அது இந்தியாவில் மட்டும் தான் கிடைக்குது. ஒரு குறிப்பிட்ட மரத்தின் பட்டையிலிருந்து மட்டும் தான் அந்த கெமிக்கலை எடுக்க முடியும். இந்த கெமிக்கலுக்கு ஒரு லிட்டருக்கு 2-4 லட்சம் தருகிறோம். அதனை கண்டுபிடித்து எங்களுக்கு அனுப்புங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படியுங்கள்: சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் வைத்திருந்த பதாகை அகற்றம்; தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு
சில நாட்கள் கழித்து, இன்னொரு மெயிலில், அந்த கெமிக்கல் இந்தியாவில் எங்கு கிடைக்கிறது என தெரிந்துவிட்டது. மும்பையில் ஆர்.கே கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் கிடைக்குது, லிட்டர் 1 லட்சம் தான், நீங்க ஒரு லிட்டர் மட்டும் வாங்கிகோங்கனு குறிப்பிட்டு வந்தது. உடனே இந்த தொழிலதிபர் ஆர்.கே கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் வெப்சைட்டில் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து வாங்கி, வீடியோவாக எடுத்து அனுப்புகிறார்.
அதை பார்த்து ஆப்பிரிக்கர்கள் சரியான கெமிக்கல் தான், நீங்க எப்படி எங்களுக்கு அனுப்புறதுனு யோசிங்க, அப்புறம் எங்களுக்கு ஒரு லிட்டர் பத்தாது 20 லிட்டர் வேணும் என கூறுகிறார்கள். அவரும் 20 லிட்டர் வாங்கி திருப்பூரில் வைத்து, அனுப்புவதற்கு விவரங்களை கேட்க, அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. அவர் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார். ஆர்.கே கெமிக்கல்ஸ் நிறுவனத்தை தேடி போய் கேட்டால், அந்த உண்மையான கம்பெனி எங்களுக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை என கை விரிக்கிறார்கள். ஆர்.கே கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பெயரை மோசடியாக பயன்படுத்தி ஆப்பரிக்கா கும்பல் இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளது. ஆப்பிரிக்க நிறுவனத்திற்கு உதவ இங்கும் சில நபர்கள் உள்ளனர்.
மத்திய அரசின் கார்பரேட் விவகாரத்துறை இணையதளத்தில் இருந்து உங்களது விவரங்களை தெரிந்துக் கொண்டு இப்படியான மோசடியில் ஈடுபடுகிறார்கள். எனவே இதுபோன்ற மெயில் வந்தால் எச்சரிக்கையாக இருக்கவும். இவ்வாறு சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil