பி.ரஹ்மான். கோவை
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு குடை பயிற்சி அளித்து வரும் நிலையில், பார்வையற்றவர்கள் விற்பனை செய்யும் பொருட்களை வாங்கி ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் பயிற்சி மையம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில், பார்வையற்றோர், காது கேளாதோர், வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வேலை வாய்ப்பினை உருவாக்கி வருகின்றன. இதற்காக அவர்களுக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்பட்டு பணிகளும் வழங்கப்படுகின்றன.
இவர்களில் படித்தவர்கள் பலரும் அரசு தேர்வுகள் எழுதி அரசு வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆனாலும் பலர் தங்களது அன்றாட வாழ்விற்காக பேனா விற்பது, கைக்குட்டைகள் விற்பது, கீ செயின், ஊதுபத்தி விற்பனை என பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே ஏதேனும் ஒரு தொழிலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சொந்த காலில் நிற்க கோவையில் வரதாராஜபுரத்தில் செயல்படும் தேசிய பார்வையற்றோர் இணையத்தின் சார்பில் பார்வையற்றோர்களுக்கு குடை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் குடைகள் செய்ய தேவையான பொருட்கள் பெறப்பட்டு குடை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
பயிற்சியை முடித்ததும் குடை தயாரிப்பை பொறுத்து சம்பளமும் வழங்கப்படுகிறது. இதனை தேசிய பார்வையற்றோர் இணைய ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து பார்வையற்றோர் இணைய ஓருங்கிணைப்பாளர் சதாசிவம் கூறுகையில்,
பார்வையற்றவர்கள் படித்திருந்தால் போட்டி தேர்வுகள் எழுதி அரசு வேலைகளுக்கு செல்கின்றனர். அல்லது தனியார் துறைகளில் வேலைகளுக்கு சென்று விடுகின்றனர். ஆனால் படிக்காத பார்வையற்றவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திய பார்வையற்றவர்கள் வேலை வாய்ப்பு இன்றி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவர்கள் பெரும்பாலும் ஊதுபத்தி விற்பனை செய்வது, நாற்காலி பின்னுதல் போன்ற தொழிலை செய்து வருகின்றனர். தற்போது ஊதுபத்தி விற்பனையில் வருமானம் மிகவும் குறைந்து வருவதாலும், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பிளாஸ்டிக் நாற்காலிகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டதால் நாற்காலி பின்னும் தொழிலும் மிகவும் குறைந்துவிட்டது.
இதனால் அவர்களுக்கு வருமானம் ஈட்டி தர வேண்டும் என்ற நோக்கில் தனியார் துறை ஒத்துழைப்புடன் குடை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சி முடித்து குடைகள் செய்ய ஆரம்பித்தால் குறைந்தது ஒரு நாளுக்கு 300 ரூபாய் வருமானம் ஈட்ட முடியும் என கூறியுள்ள அவர், பார்வையற்றவர்கள் தயாரிக்கும் தயாரிப்புகள் அல்லது விற்பனை செய்யும் பொருட்களை வாங்கி ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கம்பிகளுக்கு இடையே லாவகமா விரல்களில் வேலை பார்க்கும் இவர்கள் பார்வைற்றோர் என்பதை தாண்டி மழையா, வெயிலா குடை தருகிறோம் என தயாரிக்கும் வேகம் - உழைத்து வாழ வேண்டும் என்ற உறுதி தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.