தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இந்த ஆட்சியில் அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த 16-வது சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் திமுக மட்டுமே 125 தொகுதியில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்முறையாக ஆட்சி அரியணையில் அமரவுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து திமுக எம்எல்ஏக்களுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதற்கு முன்பாகவே திமுக தரப்பில் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அது முதல் கூட்டணி அமைப்பு, தொகுதிப்பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என திமுகவில் ஒவ்வொரு அறிவிப்பு வெளியாகும்போதும் பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், அப்போது வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறுவது யார் என்பது திமுகவினருக்கே தெரியாத ரகசியமாக இருந்தது.
அப்போது வேட்பாளர்கள் பட்டியலில் யாருக்கு இடம் என்பதை அறிந்துகொள்ள பெரும் முயற்சி மேற்கொண்ட திமுக தொண்டர்கள் பலர் கட்சியின் மூத்த தலைவர்களை முற்றுகையிட்டு தங்களுக்கு சிபாரிசு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் தேர்தல் வியூகம் அமைத்துக்கொடுத்து ஐபேக் டீம் கொடுத்த வேட்பாளர்கள் பட்டிலை ரகசியமாக வைத்திருந்த ஸ்டாலின், வேட்பாளாகள் அறிவிப்பு கூட்டத்தில் அவரே அதை வாசிக்கவும் செய்தார். அப்போதுதான் திமுக மூத்த தலைவர்களுக்கே வேட்பாளர்கள் யார் என்பது தெரிந்தது.
அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்தவுடன், கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றபோது அங்கேயே அமைச்சர்கள் பட்டியலை தயார் செய்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்த பட்டியலையும் ஸ்டாலின் யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்து வந்துள்ளார். ஆனால் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த சிலர் வெற்றி பெறாமல் போகவே தற்போது அந்த இடத்திற்கு புதியவர்களை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வேட்பாளர்கள் பட்டியல் போன்று இந்த பட்டியலையும் ஸ்டாலின் ரகசியமாக வைத்திருக்கும் நிலையில், திமுக ஆட்சியில் இடம்பெறப்போகும் அமைச்சர்கள் யார் என்பது தொடர்பான பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் திமுக தரப்பில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த பட்டியலில் உள்ள அமைச்சர்கள் பெயரை தெரிந்துகொள்ள எம்எல்ஏக்கள் பலர் கட்சியின் மூத்த தலைவர்களை தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களோ இது தலைவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அமைச்சரவை பட்டியல் வெளியிடும்போது தெரிந்துகொள்ளுங்கள் என்று கையை விரித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் சில எம்எல்ஏக்கள் மூத்த தலைவர்களை முற்றுகையிட்டு வருவதாக கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil