/indian-express-tamil/media/media_files/a5h4vWzm3yBs3GJF9qQT.jpg)
மழை வெள்ளத்தில் எம்.பி.கனிமொழி
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணி மிகவும் சவாலாக இருப்பதாகவும், மீட்பு பணிகளில் ஈடுபடுபவர்களே பாதிக்கப்படுவதாகவும் திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வருவதால், தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் கடந்த வாரத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெயர் கனமழையால், சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த பேரிடர் பாதிப்பில் இருந்து சென்னை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ள பாதிப்பு காரணமாக மக்கள் பலரும் தங்களது வீடுகளின் மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மீட்பு பணிகள் தொடர்பான வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியாகி இருந்தது.
இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் திமுக எம்.பி கனிமொழி, மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள என்.டி.ஆர்.எஃப் வீரர்களே பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் மீட்புபணிகள் மிகவும் சவாலாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆங்காங்கே கால்வாய்கள், ஏரிகள் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிட்டு, மக்களுக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்த வருகிறோம். மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். pic.twitter.com/XmJxfMgMCY
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 18, 2023
மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.கனிமொழி உடனடியாக தூத்துக்குடிக்கு திரும்பி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார். வெள்ள பாதிப்பு குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் வடிய தாமதமாகி வருவதால், மீட்பு பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளதாகவும், வெள்ளம் பாதிப்பு காரணமாக பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் மற்றும் உணவு பொருட்கள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை காலை ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெறும்.
தூத்துக்குடியில் கடந்த 200 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெருமழை பெய்துள்ளது. இங்கு பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு சமைப்பது கூட சவாலாக இருக்கிறது. மேலும் இந்த கனமழையின் காரணமாக இதுவரை தண்ணீர் வராத பகுதிகளில் கூட தற்போது தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்க அழைத்தபோது இங்கே தண்ணீர் வராது என்று சொன்னார்கள்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை ஆய்வுசெய்தோம். pic.twitter.com/w674nWXpCA
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 18, 2023
ஆனால் தற்போது இந்த பகுதிகளில் எல்லாம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. மக்களுக்கு பல சவால்களை கடந்து தான் எந்த உதவியும் செய்யக்கூடிய நிலை தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவி வருகிறது. மழை வெள்ளத்தால் காரில் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நிவாரண பொருட்களுடன் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோருடன் பேருந்தில் பயணம் செய்து மக்களுக்கு உதவிகள் வழங்கியதாக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.