/indian-express-tamil/media/media_files/2025/03/16/0gcjdH5SmDxxRFcMVLAV.jpeg)
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் அமைப்பான இந்திய யூனியன் விமன் லீக் ஒருங்கிணைத்த, இஃப்தார் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை சென்னை எழும்பூரில் உள்ள பயஸ் மஹாலில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், தி.மு.க நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி பங்கேற்று பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், இந்திய யூனியன் விமன் லீக் மகளிர் பிரிவின் தேசிய தலைவர் ஏ.எஸ்.பாத்திமா முசபர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி; நோன்பு திறப்பு நிகழ்ச்சி என்பது இன்றைய சூழலில், நம்முடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்ளக் கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். நான் இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது பாத்திமா முசபர் அவர்கள் எங்களுடைய நிறத்தில் உடை அணிந்து வந்துள்ளீர்கள் மகிழ்ச்சி என்றார்கள். உடை எதுவாக இருப்பினும், கலைஞரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்னுடைய மனம் எப்பொழுதும் உங்களோடுதான் இருக்கிறது.
முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி என்று பெருமிதத்தோடு சொல்லக்கூடிய இந்த காலகட்டத்தில், தமிழ் அடையாளங்கள், தமிழ் மொழி, தமிழ் பெருமை, தமிழ் பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய நேரத்தில், மற்றவர்களைப் போல இல்லாமல் மொழியோடு சுயமரியாதையோடு பண்பாட்டோடு கலந்து இருக்கக்கூடிய மக்களோடு, நாங்கள் என்றும் இணைத்து நிற்போம்.
ஒன்றிய பா.ஜ.க அரசுக்குத் தெரிந்த அரசியல் என்பது மக்களைப் பிரித்து வைக்க கூடிய அரசியல். மக்களை மொழியால், மதத்தால், ஜாதியால் மேலும் ஆண், பெண் என்ற வித்தியாசம் புகுத்தி பிளவும் படுத்தி அரசியல் செய்வார்கள். ஒன்றிய அரசு ஆண், பெண் என்று எப்படிப் பிரிக்கிறார்கள் என்றால், ஒரு உதாரணத்தை சொல்கிறேன். இஸ்லாமிய சமுதாயத்தில் விவாகரத்து செய்தல், ஆண்களை ஒரு ஆண்டு சிறை அனுப்பக்கூடிய முத்தலாக் சட்டம் என்ற மசோதாவைக் கொண்டு வருகிறார்கள்.
நான் நாடாளுமன்றத்தில் இதைப் பற்றி கேள்வி எழுப்பினேன். இந்த மசோதாவில் மட்டும் ஏன் இப்படிப்பட்ட ஒரு சட்டம் கொண்டு வரப்படுகிறது என்று? அப்போது, எதிரில் இருந்த அமைச்சர் என்னிடம் கேட்டார். ஏன் உங்களுக்கு இஸ்லாமிய பெண்கள் மீது அக்கறை இல்லையா என்று? நீங்கள் இஸ்லாமிய பெண்களுக்காக இதை செய்யவில்லை. இஸ்லாமிய ஆண்களை எப்படி சிறைக்கு அனுப்ப முடியுமோ, அதற்கு வழியைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஹிந்துக்களும், கிறிஸ்துவர்களும் தன்னுடைய குடும்பத்தை விட்டு விலகி சென்று விட்டால் அவர்களுக்கு சிறைத் தண்டனை கிடையாது. இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் செய்தல் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை. நம்மைப் பாதுகாப்போம் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவரக்கூடிய சட்டம், மக்களை பிளவுபடுத்தக்கூடிய ஒன்றாகத் தான் இருக்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இந்த நாட்டில் இருக்கக்கூடிய சிறுபான்மையின மக்களை ஒடுக்குவதற்காக, நாட்டின் விரோதிகள் போல சித்தரித்து காட்டுகிறார்கள். இந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டவர்கள் இஸ்லாமியர்கள். இந்த நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் இஸ்லாமியர்கள். இந்த நாட்டிற்காக சிறை சென்றவர்கள் இஸ்லாமியர்கள்.
இப்படி யாராவது ஒருத்தரை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் காட்டுங்கள். ஒரு பெயரை மட்டும் சொல்லுவார்கள், அவரும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்துடுவார். ஒரு கதை சொல்வார்கள், பறவையின் சிறகு மீது ஏறி சாவார்கர் சிறையிலிருந்து வெளியே வந்தாக சொல்வார்கள். கட்டுக்கதை எப்படி புனையப்படுகிறது என்பதிற்கு இது ஒரு மிகப் பெரிய உதாரணம்.
தேசவிரோதிகள், அர்பன் நக்சல் (Urban Naxal) என்று நம்மை பார்த்து சொல்கிறார்கள். தற்போது, நம்மைப் பார்த்து Uncivilized (நாகரீகமற்றவர்கள்) என்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார். நீங்கள் எங்களை பார்த்து நாகரீகமற்றவர்கள் என்று சொல்லும்போது பெருமையாக எடுத்துக் கொள்கிறோம். உங்களுக்கு Civilization (நாகரீகம்) என்றால் என்ன என்பதுகூட தெரியாது.
5,000 ஆண்டுகளுக்கு முன்னாள் தொன்மை வாழ்ந்த ஒரு குடியில் பிறந்த தமிழர்களைப் பார்த்து ஒருவர், நீங்கள் நாகரீகமற்றவர்கள் என்று அழைக்கும் போது அவர்களுடைய நாகரிகம், சரித்திரத்தை பற்றி நமக்கு நன்றாக தெரிகிறது.
இந்த நாட்டில் இருக்கக்கூடிய சிறுபான்மையினருக்கு, தமிழர்களுக்கு, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக ஒரு ஆட்சியை நடத்துபவர்கள், இன்று தமிழ் நாட்டிற்கு எதிராக, தமிழ் மக்களுக்கு எதிராக நம்முடைய மொழிக்கு, நம்முடைய பண்பாடு மேலும் நம்முடைய மாநிலத்தை ஒடுக்கக்கூடிய அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லாருக்கும் தெள்ளத் தெளிவாக இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் இஸ்லாமிய சொத்துக்களையெல்லாம் பறித்து, அதிகார வர்க்கத்தில் இருக்கக்கூடிய அந்த இரண்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்டது வக்ஃபு மசோதா. இந்த மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என்று ஒன்றிய அரசு துடித்துக் கொண்டு இருக்கின்றது.
தமிழர்களுடைய உரிமை, சிறுபான்மையினர்களுடைய உரிமைக்கு எதிராக ஒவ்வொரு நாளும் சட்டங்களை இயற்றி, அரசியல் செய்து கொண்டிருக்கக் கூடிய ஒரு இயக்கத்தை எதிர்த்து நின்று இந்த நோம்பு கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை இங்கே இருக்கக்கூடிய ஒவ்வொரு சகோதரியும் சகோதரனும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இந்த போராட்டம் என்பது இன்று முடியக்கூடியது இல்லை. ஏனென்றால், டெல்லியில் ஆட்சியில் செய்யும் இடத்திற்கு இடம் அளித்து விட்டோம். ஒரு மாற்றத்திற்காக பா.ஜ.க.,வை ஆட்சியில் அமர வைத்துவிட்டு, நாடு முழுவதும் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஊடகத்தினருக்கும் கருத்து சொல்வதற்கு உரிமை இல்லை. அனைத்து ஊடகத் துறையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைகளில் தான் இருக்கிறது. அந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றிய அரசாங்கத்தின் கைகளில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
டெல்லியில் சொல்வார்கள் ICE (வருமான வரித்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறை) இது மூன்றும் எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்கள் மீது ஏவப்படும். இப்படித்தான், எதிர்க்கட்சியினரைப் பயமுறுத்தி, அச்சுறுத்தி, அடக்கி விட முடியும் என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொண்டிருக்கிறது. இரவோடு இரவாக ஒரு தேர்தல் கமிஷனரை நியமிக்கப்படுகிறார். ஏனென்றால், தேர்தல் கமிஷனர் ஒன்றிய அரசு சொல்வதற்கு, அடிபணிந்து நடக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற அவையில் சொல்கிறார். மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலின் போது, புனேவில் ஒரு கட்டிடத்தில் கிட்டத்தட்ட 5000 பேர் புதிதாகத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். கிட்டத்தட்ட, இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு நிகராக மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலின் போது சேர்க்கப்பட்டு உள்ளார்கள். இந்த நாட்டில் இப்படித்தான் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேர்தல் வாக்காளர் அட்டைகளில் இருக்கக்கூடிய நம்பர், மற்ற மாநிலத்தில் உள்ளவர்களுக்கும் அதே நம்பர் இருக்கிறது. ஒரே மாதிரியான வாக்காளர் அட்டையை வைத்துள்ளார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்.
தொகுதி மறுசீரமைப்பு மூலம் பா.ஜ.க.,விற்கு வாக்கு அளிக்காத மாநிலங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தங்களுடைய பிரதிநிதிகளை இழக்க நேரிடும் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி முதலமைச்சர் சொல்கிறார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா போன்ற மாநிலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும். பா.ஜ.க.,விற்கு எதிராக இருக்கக்கூடிய மாநிலங்களில் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பதை ஒரு எச்சரிக்கையாக இந்த ஆண்டு முழுவதும் இருக்கக்கூடிய மக்களுக்குத் முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிறுபான்மையினர் மட்டும் அல்ல, ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக்கூடிய மொழி, பண்பாடு, வரலாறு மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னால் இருக்கக்கூடிய அத்தனை உரிமைகளையும் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பா.ஜ.க அரசு பறித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நாட்டிலிருந்து ஒன்றிய அரசை விரட்ட கூடிய நாள் விரைவில் வரவேண்டும் என்று நாம் ஒரு போராட்டத்தை முன்னெடுப்போம் முன்னெடுப்போம் முன்னெடுப்போம் என்று சூளுரை ஏற்று, எல்லோரும் மனிதர்களாகத் தமிழர்களாக அணி திரள்வோம் என்று பேசினார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.