வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெற உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், இந்த கூட்டத்திற்கு முன்னாள் முதல்வர்கள் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி (நாளை மறுநாள்) அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்கும் பணி தொடர்பான ஆலோசனை நடைபெற உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில நாளை மறுநாள் காலை 11.30 மணிக்கு தொடங்கும் இந்த அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் மாநில மற்றும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிமுகவில் தற்போது இரு துருவங்களாக பிரிந்துள்ள முன்னாள் முதல்வர்கள் ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி அணி சார்பாக பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் ஒபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூம் எடுத்துள்ள நிலையில், ஒ.பி.எஸ் இ.பி.எஸ் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கும் படலம் அரங்கேறி வருகிறது. இதனிடையே தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு இருவருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil