தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை ஆறு கோடிக்கு மேல் அதிகரித்து வருவதாகவும், புதிதாக 10 லட்சம் பேர் சேர்ந்து உள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பில், "2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை, வாக்காளர் தகுதிப்படுத்தும் நாளாக கருதி, வாக்காளர் பட்டியலை தயாரிக்க இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன்படி, 2022 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அந்த பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தவும், இடம் மாற்றம் செய்யவும் தேவைப்பட்டால் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 8ம் தேதி வரை பெறப்பட்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடைபெற்று வந்தது.
இதை தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
இதை பற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறியதாவது, "தற்போது ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 10 லட்சத்து 54 ஆயிரத்து 566 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அவற்றில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 141 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பெயர் நீக்கத்திற்காக 8 லட்சத்து 43 ஆயிரத்து 7 விண்ணப்பங்கள் வந்தது, அதில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 136 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
பெறப்பட்ட விண்ணப்பங்களில் முகவரி மாற்றத்திற்காக 5 லட்சத்து 32 ஆயிரத்து 526 பெயர்களும், இறப்பு காரணமாக 2 லட்சத்து 47 ஆயிரத்து 664 பெயர்களும், இரட்டை பதிவு தொடர்பாக 21 ஆயிரத்து 946 பெயர்களும் நீக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரத்து 866 பேர், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 286 பேர், மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர் ஆகும்.
அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி கண்டறியப்பட்டு உள்ளது. அந்த தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 66 ஆயிரத்து 295 வாக்காளர்கள் உள்ளனர்.
அதற்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 408 வாக்காளர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இதுவரை 4 லட்சத்து 48 ஆயிரத்து 138 பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டு உள்ளனர். வாக்குப்பதிவின் போது அவர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு பெறப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியலை சரிபார்த்துக்கொள்ள, https://elections.tn.gov.in என்ற வலைதளத்தை அணுகலாம்.
மேலும், 18 வயது நிரம்பியவர் யாரேனும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் www.nvsp.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம் அல்லது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ''Voter Helpline App'' செயலியின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
17 வயது முடிந்திருந்தாலும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் முதல் தேதியில் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரருக்கு 18 வயது பூர்த்தி ஆகும்பொழுது அந்த காலாண்டின் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படும்.
இதை தொடர்ந்து, 180042521950 ஆகிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்துகொள்ளலாம்", என்று அவர் அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.