ஈரோட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டு இருந்ததாக, குடோனில் இருந்து 24,150 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அ.தி.மு.க வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சித்தோடு காவல் எல்லைக்குட்பட்ட காலிங்கராயன் பாளையம் அருகே அண்ணா நகரில் உள்ள தனியார் கட்டடத்தில், ரகசியத் தகவலின் அடிப்படையில் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். அப்போது 161 மூட்டைகளில் 24,150 சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதற்கான ஆவணங்கள் இல்லாததால், சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இந்த சேலைகளை, அ.தி.மு.க வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 20 நாட்களுக்கு முன் வாங்கி, குடோனில் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அசோக்குமார் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது ஐ.பி.சி 171 (இ) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே புடவைகள் வாங்கப்பட்டதாகவும், தமிழ் புத்தாண்டுக்காக தனது ஆற்றல் அறக்கட்டளை மூலம் துப்புரவுப் பணியாளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகவே புடவைகள் வாங்கபட்டதாகவும் ஆற்றல் அசோக் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், “ஆற்றல் அறக்கட்டளை கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, எங்கள் அறக்கட்டளை துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு புதிய ஆடைகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் அதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் கொண்டாட்டத்தை தள்ளி வைத்தோம். புடவைகள் முறையான விதிமுறைகளை பின்பற்றி கட்டிடத்தில் வைக்கப்பட்டன. வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. தேர்தல் முடிந்ததும் அந்த சேலைகளை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்குவோம். இது குறித்து அதிகாரிகளிடம் உரிய விளக்கம் அளித்துள்ளோம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“