/tamil-ie/media/media_files/uploads/2021/02/ttv-dinakaran.jpg)
Tamilnadu Election TTV Dinakaran Contest 2 Constituencies : தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த தேர்தலில், 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1999 மற்றும் 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 1999-ம் ஆண்டு மட்டும் வெற்றி பெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ம் ஆண்டுக்கு பிறகு தேர்தலில் போட்டியிடாத அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அவர் எம்எல்ஏவாக இருந்த ஆர்கே நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது டிடிவி தினகரன் தமிழக அரசியலில் தனது இரண்டாம் அத்தியத்தில் களமிறங்கியுள்ளார். மேலும் சொத்து குவிப்பு வழக்கில், சிறை சென்ற சசிகலா தற்போது விடுதலை பெற்று சென்னை திரும்பியுள்ள நிலையில், அவரது வருகை டிடிவி தினகரனுக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது.
இதில் தற்போது சசிகலாவை முன்னிறுத்தியே டிடிவி தனது அரசியல் அத்தியாயத்தை தொடங்கவுள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்றும், இதில் தற்போது தான் எம்எல்ஏ-வாக உள்ள ஆர்கே நகர் மற்றும் தேனியில் ஒரு தொகுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதில் ஆர்கே நகர் தொகுதியை வெளிப்படையாக அறிவித்த டிடிவி, தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதி என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அவர் தேனி மாவட்டத்தில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் ஏற்கனவே அவர் போட்டியிட்ட எம்பி தொதியான பெரிய குளம் தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேனியில் கம்பம், போடி, அல்லது ஆண்டிப்பட்டி இந்த 3தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.