Tamil Nadu Engineering Admission : இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஞாயிறு அன்று முடிவடைந்த நிலையில், மொத்தமாக 95, 069 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வு மூலம் 440 கல்லூரிகளில் உள்ள 1,51, 871 இடங்களில் மொத்தம் 62.6% இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. வெறும் 56, 802 இடங்கள் நிரப்பப்படவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் 50% இடங்கள் கூட நிரம்பாத நிலையில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த கலந்தாய்வு மிகவும் முக்கியமான கருதப்படுகிறது. 100% தேர்ச்சி இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் பதிவான நிலையில் அதிக மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் படிக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்த்தோம் என்று தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு செயலாளர் செல்வராஜ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கலந்தாய்வு மூலமாக 78,782 மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளில் இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மொத்தம் இருந்த 1,63,154 இடங்களில் 84,472 நிரப்பப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் அறிக்கைப்படி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேரும் போக்கு வரும் காலங்களிலும் அதிகரித்து வரும் என்று தெரியவருகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட ஊரடங்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வளார்ச்சிக்கு உதவியது. ஐ.டி. மற்றும் அதனை சார்ந்த தொழில்துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. பல இடங்களில் சுயதொழில் முனைவோர்கள் தங்களின் சொந்த ஆக்கங்களை முன்வைக்க, பொறியாளர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது அந்த கூட்டமைப்பின் கூடுதல் செயலாளர் டி.டி. ஈஸ்வரமூர்த்தி அறிவித்துள்ளார்.
ஆனாலும் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 20%க்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்த கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பிற்கு கீழ் கொண்டு வந்து அங்கு கல்வியின் தரம் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 7,876 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் இணைந்துள்ளனர். 473 மாணவர்கள் சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் இணைந்துள்ளனர். தற்போது பொது கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், இன்று (25/10/2021) அன்று பி.ஆர்க் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது. இந்த படிப்பிற்கான கலந்தாய்வு வருகின்ற 27ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
சிறப்பு இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்கள் அக்டோபர் 27-ஆம் தேதி அவர்களின் விருப்பத் தேர்வினை பூர்த்தி செய்து கொள்ள இயலும். அதன்பிறகு, தற்காலிக இட ஒதுக்கீடு அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறும். ப்ரோவிசனல் இடஒதுக்கீடு அக்டோபர் 29ம் தேதி அன்று நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான விருப்பத்தேர்வு அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி, தற்காலிக இட ஒதுக்கீடு நவம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிகப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil