முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்ற துணை கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த தமிழக பிரதிநிதிகள், கேரள அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் இருப்பதாகக் கூறி ஆய்வை புறக்கணித்தனர்.
முல்லை பெரியாறு அணையின் துணை கண்காணிப்பு குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் சதீஷ் பதவி வகித்து வருகிறார். இந்தக் குழுவில் தமிழக பிரதிநிதிகளான முல்லை பெரியாறு அணை சிறப்பு கோட்டச் செயற்பொறியாளர் சாம் எர்வின் மற்றும் உதவி செயற்பொறியாளர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், கேரள அதிகாரிகளான கிரண் தாஸ் மற்றும் லெவின்ஸ் பாபு ஆகியோரும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இக்குழுவினர், முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்காக நேற்றைய தினம் சென்றிருந்தனர். அப்போது அணையை பராமரிப்பதில் கேரள அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, இடையூறு ஏற்படுத்திவதாகக் குற்றஞ்சாட்டிய தமிழக பிரதிநிதிகள், ஆய்வை புறக்கணித்துச் சென்றனர்.
குறிப்பாக, அணையின் உபரிநீர் வெளியேறும் பகுதி, பிரதான பகுதி, மற்றும் அணையை பார்வையிடும் பகுதி உள்ளிட்ட 13 பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், இப்பணிகளை முன்னெடுக்க விடாமல் கேரள அரசு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயலாற்றுவதாகவும் தமிழக அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே இப்பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்ததாகவும், கேரள அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பணிகள் கிடப்பில் இருப்பதாகவும் தமிழக பிரதிநிதிகள் கூறுகின்றனர். கடந்த மே மாதத்தில் இப்பணிகள் குறித்து தெரியப்படுத்தியதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் தற்போது வரை இவை செயல்படுத்த முடியாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
மற்றொரு புறம், தங்கள் மாநில உயரதிகாரிகளின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியுமென கேரள அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த தமிழக அதிகாரிகள் ஆய்வை புறக்கணித்துச் சென்றனர். இதனால் துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வு தடைபட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் கேரள அதிகாரிகள் முறையாக பின்பற்றுவதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“