தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் வெளியாகும் நிலையில், டிக்கெட் கட்டணத்தில் விதிக்கப்படும் 8% கேளிக்கை வரி, குறிப்பாகச் சிறிய பட்ஜெட் படங்களுக்குப் பெரும் சுமையாக இருந்து வந்தது. இதனால், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து வரியைக் குறைக்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
திரைப்படத் துறையினரின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு தற்போது கேளிக்கை வரியை 4 சதவீதமாகக் குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, திரைப்படத் துறையினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, திரையுலக வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.