scorecardresearch

உதயநிதி vs அண்ணாமலை… ஈரோடு கிழக்கில் மாறி மாறி செங்கல் பிரச்சாரம்

வரும் 25-ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தங்களது வேட்பாளருக்கு ஆதரவான பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

உதயநிதி vs அண்ணாமலை… ஈரோடு கிழக்கில் மாறி மாறி செங்கல் பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் ஈரோடு மாவட்டம் பெரும் பரபரப்பை சந்தித்து வருகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் இ.வி.கே.எஸ் இளங்கோவனும், அதிமுக கூட்டணி சார்பில் தென்னரசு, மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் 25-ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தங்களது வேட்பாளருக்கு ஆதரவான பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இ.வி.கே.எஸ் இலங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்தியாவில் எந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும் அது அதானிக்குதான் சென்றுகொண்டிருக்கிறது. பிரதமர் மோடி எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் அதானியின் விமானத்தில் தான் செல்கிறார். மக்களுக்கு குறைந்த விலையில், சேவை செய்வதற்காகவே பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் துறைமுகம் உள்ளிட்ட பலவற்றை மோடி அரசு அதானிக்கு கொடுத்துவிட்டது.

இந்தியாவில் இதுவரை 6 ஏர்போர்ட் அதானி கையில் உள்ளது. மோடியின் ஒரே கொள்கை ஒரே நாடு, ஒரு மொழி, அவருக்கு இருப்பதும் ஒரே நண்பர் அவர்தான் அதானி. ஆனால் அதானி நிறுவனம் முறைகேடு செய்திருப்பதாக அமெரிக்க நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல் குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பாக பிபிசி அலுவலகத்தில் ரெய்டு நடக்கிறது.

அதிமுக ஆட்சியில், கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்த போது ரூ.7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்தார். இந்த எய்ம்ஸ் மருத்துவமனைகக்கு இதுவரை ரூ.300 கோடி செலவு செய்ததாக தெரிவித்துள்ளனர். ரூ.300 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இது தான் என்று கூறி பொட்டல் காடாக காட்சி அளிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய இடத்தின் படத்தை காட்டினார்.

மேலும் அங்கு இருந்தது ஒரே ஒரு செங்கல் தான். அதையும் நான் எடுத்து வந்து விட்டேன் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் செங்கலை காட்டினார். இது தான் பா.ஜனதாவும் அ.தி.மு.க.வும் மதுரைக்கு கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எய்ம்ஸ் செங்கல்லை வைத்து பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் தற்போது மீண்டும் அதே செங்கல்லை கையில் எடுத்துள்ளார்.

இதனிடையே உதயநிதியின் குற்றச்சாட்டுக்கு பதில் தரும் விதமாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது பிரசாரத்தின் போது தானும் ஒரு செங்கலை எடுத்து காட்டி 2009-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தர்மபுரியில் சிப்காட் அமைக்கப்படும் என்று கூறினீர்களே 14 ஆண்டுகளாகியும் அங்கு ஒரு செங்கலை கூட காணவில்லை. எனவே இந்த ஒரு செங்கலை உதயநிதி ஸ்டாலினுக்கு பார்சல் அனுப்பி வைப்பேன் என கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின்-அண்ணாமலை செங்கல் காட்டி மாறி, மாறி பிரசாரம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் தி.மு.க.-பா.ஜனதா தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu erode east by election campaign udhayanidhi vs annamalai