குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான நேற்று காஞ்சீபுரத்தில் சுமார் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
அந்தவகையில் திருச்சியில் சுமார் 58 ஆயிரம் பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் செலுத்துவதற்கான நிகழ்ச்சி திருச்சியில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 2,100 பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கான டெபிட் கார்டுகளை கொடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு, வங்கி அதிகாரிகள் வழங்கினர்.
/indian-express-tamil/media/post_attachments/f95dfb33-7a7.jpg)
இந்நிலையில் இன்று(16.09.2023) திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் திடீரென நூற்றுக்கணக்கானோர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை எடுப்பதற்காக கூடிவிட்டனர். தங்களுக்கு கைபேசியில் குறுஞ்செய்தி வந்தும், சிலருக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என்றுக்கூறி தத்தம் வங்கிகளுக்கு படை எடுத்தனர்.
அந்தவகையில், பாலக்கரை இந்தியன் வங்கியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் வந்து பணத்தை எடுக்கவேண்டும் எனக் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வங்கி ஊழியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கினர்.
வங்கி மேலாளரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வங்கியின் பிரதான வாயில் கதவு இழுத்து மூடப்பட்டது. பின்பு வங்கியின் வாயிலில் காத்திருந்தவர்களிடம் இந்தியன் வங்கி கிளையின் ஊழியர் நேரடியாக பேசி ஒவ்வொருவரின் அலைபேசி மற்றும் வங்கிக் கணக்கு எண்களை பரிசோதித்து பணம் வரவு வைக்கப்பட்டது, வரவு வைக்கப்படவில்லை என்றத் தகவல்களை தந்துக்கொண்டிருந்தார்.
இந்தசூழலில், சில பெண்கள், தாங்கள் வீட்டில் சிறு குழந்தைகளை விட்டு விட்டு வங்கிக்கு வந்திருக்கின்றோம், வங்கி ஊழியர்கள் எங்களை அவமரியாதை உடன் நடத்துவதாக குறிப்பிட்டனர். அதேநேரம், வயதானவர்களும் நீண்ட நேரம் வந்து காத்திருந்தால் வங்கியின் வாசலில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை சமாளிக்க முடியாமல் வங்கி ஊழியர்கள் திணறி தவித்தனர்.
ஒரு சில பெண்கள் தங்களுக்கு வேறு வங்கி கணக்கில் ரூ.1000-ம் வரவு வைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்கனவே இருக்கும் வங்கிகளுக்கான ஆவணங்களை கொடுத்த போதும் ஏன் தற்பொழுது ஆவணங்கள் இல்லாத வங்கி கணக்கில் வரவு வைத்திருக்கின்றனர் எனப் புலம்பினர். அப்போது ஊழியரோ ஏம்மா, பணம் போடலைன்னாலும், பிரச்சனை போட்ட பின்பும் ஏம்மா பிரச்சனை பண்றீங்கன்னு புலம்பித் தீர்த்தார்.
திடீரென வங்கியில் குவிந்த மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளால் அந்த வங்கியின் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“