/tamil-ie/media/media_files/uploads/2023/05/New-Project105.jpg)
Farmer
விவசாயத்திற்கு ஆள் கிடைக்கவில்லை. கூலி, பஞ்சப்படி, பயணப் படி என அனைத்து சலுகைகளும் வழங்குகிறேன். உங்க அலுவலகத்தில் உள்ள உபரி ஊழியர்களை விவசாயத்திற்கு அனுப்பி வையுங்கள் எனக் கூறி விவசாயி ஒருவர் தென்காசி ஆட்சியருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா, நெல்கட்டும்செவல் ஊராட்சி பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "எனது கிராமத்தில் உள்ள எனது 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். பிப்ரவரி முதல் ஜூன் வரையில் கோடை கால பருவத்திலும் செப்டம்பர்-ஜனவரி வரையில் மழை கால பருவத்திலும் விவசாயம் செய்து வருகிறேன். இந்த 2 பருவத்திலும் பயிரின் வயதுக்கு ஏற்ப முதல் 50 நாட்கள் வரையில் களை எடுப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிக்காக அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். கடைசி 30 நாட்கள் அறுவடை பணிக்கும் கூலி ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்த காலகட்டங்களில் 100 நாள் வேலைக்கு கிராம மக்கள் அனைவரும் சென்று விடுகின்றனர்.
இதனால் பயிர்களுக்கு களை எடுக்க ஆள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறேன். அப்படியே ஆட்கள் கிடைத்தாலும் 100 நாள் வேலை காரணமாக 7 மணி நேர வேலை என்பது 4 மணி நேரமாக சுருங்கி போய்விட்டது. இதனால் பயிர் பராமரிப்பு செலவு அதிகமாகி விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறோம். தற்போது நான் 3 ஏக்கரில் பருத்தி பயிரிட்டுள்ளேன். எங்கள் பகுதியில் தற்போது 100 நாள் திட்ட பணிகள் நடைபெறுவதால் களை எடுக்க ஆட்கள் கிடைக்கவில்லை. எனவே ஆட்சியர் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் இருந்தால் அவர்களை களை எடுக்க அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு கூலி, பஞ்சப்படி, பயணப்படி, மதிய உணவு என அனைத்தையும் கொடுக்க தயாராக உள்ளேன்". இவ்வாறு விவசாயி மகேஸ்வரன் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.