Tamil Nadu Finance Minister PTR on GST : இந்தியாவில் மார்ச் 29ம் தேதி, 2017ம் ஆண்டு நிறைவேறிய மிக முக்கியமான மசோதா ஜி.எஸ்.டி. மசோதாவாகும். ஒரே நாடு, ஒரே வரி என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டு, நடப்பில் இருந்த பல்வேறு வரிகளை 5 பிரிவுகளுக்கு கீழ் கொண்டு வந்தது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஜி.எஸ்.டி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று அன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவையில் பேசினார்.
இது குறித்து இன்று தமிழக நிதி அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர். ஆங்கில செய்தி நிறுவனமான மிண்ட்டில் எழுதிய கட்டுரையில் ஜி.எஸ்.டி. தொடர்பாக பல்வேறு முக்கிய விசயங்களை பகிர்ந்துள்ளார். அந்த கட்டுரையின் சிறப்பு அம்சங்களை நாம் இங்கே காண்போம்.
மாநிலங்களுக்கு இடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் அதிகமாக இருக்கின்ற இந்த சூழலில் பொருளாதார ஒன்றியத்தை உருவாக்க ஜி.எஸ்.டி. திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஒரே நாடு, ஒரே வரி என்ற காரணத்திற்காக மாநிலங்கள் தங்களின் நிதி உரிமைகளை இழந்துள்ளன. இது போன்ற ஏற்றத்தாழ்வுடன் உள்ள பொருளாதார சூழலை இந்தியாவின் தனித்துவமான பன்முகத்தன்மையுடன் இணைத்து வழங்கப்படும் ஜி.எஸ்.டி. பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
உள்நாட்டு வருமான வேறுபாட்டைக் கொண்டிருக்கும் உலகின் ஒரே ஒரு பெரிய நாடு இந்தியா மட்டுமே என்பது இன்னும் மோசமானது. பணக்கார மற்றும் ஏழை மாநிலங்களுக்கு இடையேயான வருமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது தவிர குறையவில்லை.
இந்தியாவில் 3 பணக்கார மாநிலங்கள், மூன்று ஏழை மாநிலங்களைக் காட்டிலும் மும்மடங்கு பொருளாதாரத்தில் சிறப்பு மிக்கதாக இருக்கிறது. இது சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டுள்ள பிராந்திய பொருளாதார நிலைகளில் ஏற்பட்ட சமமற்ற தன்மையின் உச்சமாக திகழ்கிறது. குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என நான்கு மாநிலங்களுக்குள் நடைபெறும் வர்த்தகத்தின் கூட்டு இதர 25 மாநிலங்களில் உள்ள உள்வர்த்தக நிலைக்கு சமமாக உள்ளது.
இந்தியாவில் ஐந்தில் ஒரு பங்கு கார்களும், இருசக்கர வாகனங்களும் மகாராஷ்ட்ராவிலும் தமிழகத்திலும் விற்பனை ஆகிறது. ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக தமிழர் ஒருவர் ரூ.1.4 லட்சம் சம்பாதிக்கின்றார். இது பிஹாரின் தனிநபர் வருமானமான ரூ. 35000 சராசரியை காட்டிலும் நான்கு மடங்கு அதிகம்.
இந்த இரண்டு மாநிலங்களுக்கும் அவர்களின் வருமானம் மற்றும் அமைவிட வேறுபாடுகளுக்கு ஏற்ப வரிவிதிப்பு அமைப்பு மற்றும் கொள்கை முன்னுரிமைகளில் வேறுபட்ட வழங்கலை தர வேண்டும் என்பது தெளிவாகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவத்தை வழங்கும் ஜிஎஸ்டி கவுன்சில் அத்தகைய இழுப்புகளுக்கும் அழுத்தங்களுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கும். ஆனால் வருங்காலத்தில் குறிப்பாக மாநிலங்களுக்கு இடையே இருக்கும் பொருளாதார இடைவெளி மேலும் அதிகரிக்கின்ற போது ஜி.எஸ்.டி. இந்த நுட்பமான சமநிலையை பெற பெரிதும் போராடும்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட ஐந்தில் இரண்டு பங்கு மற்றும் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பிராந்திய கட்சிகளின் ஆளுமைகளால் உருவானவர்கள். 82களில் எம்.ஜி.ஆர். அனைத்து பொருட்களின் வரியை உயர்த்தியதால் தான் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் சாத்தியமானது. கல்வி அறிவு விகிதமும் 51%-ல் இருந்து 83% ஆக உயர்ந்தது. ஆனால் ஜி.எஸ்.டியின் கீழ் ஒரு முறை, மாநில ரீதியில் குறிப்பிட்ட வரி உயர்வு என்பது சாத்தியமில்லை. இது பிராந்திய கட்சிகள் அவர்களின் தேவைக்கு ஏற்ப கொள்கைகளை உருவாக்கும் திறன்களை கட்டுப்படுத்துகிறது.
சமீபத்தில் இந்து நாளிதழில் அவர் எழுதிய கட்டுரையில், வணிக வரி, கலால், கனிமங்கள், பத்திரப் பதிவு மற்றும் முத்திரைத்தாள் மூலமாக கிடைக்கும் வருவாய் மாநில மொத்த உற்பத்தியின் சராசரி என்பதை கண்டறிந்த பிறகு தொடர்புடைய துறைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாநிலத்தில் வருவாய் திரட்ட முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மே 7ம் தேதி அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், முதல் கடமையாக ஜி.எஸ்.டி. நிலுவையை மாநில அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தருவேன் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.