கடலில் படகு மூழ்கிய மீனவரின் குடும்பத்திற்க முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு வழங்கிய நிலையில், இந்த தொகை போதுமானதாக இல்லை என்று நிவாரணம் பெற்றவர் அந்த காசோலையை அமைச்சரிடம் திரும்ப ஒப்படைத்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரிந்த மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிதாக ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ரூ114 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (மார்ச் 4)திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில், கடந்த 2020-ம் ஆண்டு கனமழை காரணமாக துறைமுகம் அருகே பூம்புகார் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரமேஷ் என்பவரின் விசைப்படகு சேதமடைந்தது. இதற்காக அவருக்கு நேற்று நிவாரணமாக ரூ2 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். காசோலையை பெறுவதற்காக மேடை ஏறிய ரமேஷ் நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை கூறியுள்ளர்.
ரூ5 லட்சம் இழப்பீடு கிடைக்கும் என எதிர்பார்த்த ரமேஷ் மேடையில் காசோலையை, பெற்றுக்கொண்டாலும், அதை மேடையில் இருந்த அமைச்சர்களிடம் திருப்பி கொடுத்துள்ளார். இதனால் விழா மேடையில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த போலீசார் ரமேஷை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். கூடுதல் நிவாரணம் அல்லது நிவாரணத்திற்கான அனுமதி ஆணையில் பெயர் மாற்றம் காரணமாக திருப்பி கொடுத்தேன் என ரமேஷ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மீனவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்கும் என ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தார். பின்னர் அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து காசோலையை ரமேஷ் ஏற்றுக்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“