பயணிகளே, நாம் இப்போது காவிரி ஆற்றின் மேல் 16 ஆயிரம் அடி மேல் பறக்கிறோம். இன்னும் சில மணித்துளிகளில் உங்களுக்கு வலதுபுறம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலும், கொள்ளிடம் ஆறும் தெரியும்..
என்ற அறிவிப்பு உங்களை மலைக்கவைக்கிறதா? நான் காண்பது என்ன கனவா என்று உங்களயே நீங்கள் கிள்ளிப்பார்க்கிறீங்களா, அது கனவு இல்லை நிஜம் தான்.
தமிழக நகரங்களிடையே பறக்கும் விமானங்களில் இனி தமிழில் அறிவிப்பு மேற்கொள்ள மத்திய விமானத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ள நிலையில், நாம் மேற்கண்ட அறிவிப்பை கேட்டுள்ளோம்.
சென்னையிலிருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் பலவற்றில் தமிழில் அறிவிப்பு இருப்பதாகவும், இந்திய விமான நிறுவனங்கள் தமிழில் அறிவிப்பதில்லை எனவும் புகார் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. சென்னை வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை வந்து செல்லும் பயணிகள் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த அறிவிப்பு தற்போது முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து மதுரை நோக்கி பறந்த விமானத்தில் கேப்டன் பிரியா விக்னேஷ், தமிழில் அறிவிப்பு செய்யும் வீடியோ, சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து கேப்டன் பிரியா விக்னேஷ் கூறியதாவது, தமிழில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனது சீனியர்களிடமிருந்து தனக்கு வந்தது. இந்திய விமானப்படையின் முன்னாள் பைலட் கேப்டன் சஞ்சீவ் குமார், பல்வேறு லேண்ட்மார்க்குகளை நினைவில் ஏற்றி, விமானம் அதன்மேல் பறக்கும்போது, பயணிகளிடம் அதுகுறித்த தகவல்களையும், சிறுசிறு நீர்நிலைகள் குறித்த தகவல்களை கூட அவர் பயணிகளிடம் பகிர்ந்துகொண்டே வருவார்.
அவர்தான், என்னை தமிழ்நாட்டில் உள்ள லேண்ட்மார்க்குகளை பற்றி அறிந்துகொள்ள வலியுறுத்தினார். விமானப்பயணத்தின் போது பாதுகாப்புக்காகவும், அசாதாரண சூழ்நிலைகளில் அந்த இடத்திற்கு ஏற்ப செயல்படவும், விமான ஊழியர்களுக்கு லேண்ட்மார்க்குகளை அடையாளம் காண்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழக நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களில் 90 சதவீதம் தமிழ் தெரிந்த மக்களே பயணம் செய்வதால், அவர்களுக்கு தமிழில் அறிவிப்பு கிடைப்பதனால், அவர்கள் அதனை உன்னதமான அனுபவமாக கருதுகின்றனர்.
நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது, எனது அம்மா விமானம் குறித்த கதைகளை தொடர்ந்து கூறிவந்தார். அதனால் ஈர்க்கப்பட்டு . நான் அந்த கதைகளை கேட்கும்போதே, நான் என்னை பைலட்டாக நினைத்துக்கொண்டதாலேயே, நான் இன்று உங்கள் முன் பைலட் ஆக நின்றுள்ளேன்.
எனது தாய் தமிழ் ஆசிரியையாக இருந்ததால், எனக்கு சிறுவயது முதலே, தமிழ் மொழியின் மேல் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இளநிலை படிப்பில் வரலாறு படித்து நிறைய விசயங்களை தெரிந்துகொண்டேன். பின் விமானப்படை பயிற்சியில் இணைந்து தற்போது இந்த நிலைக்கு முன்னேறியுள்ளேன்.
இண்டிகோ ஏர்லைன்சில் பணிக்கு சேர்ந்தபோது, தமிழில் அறிவிப்பு செய்ய விருப்பம் என்று தெரிவித்தேன். புதிய ஐடியாவாக இருந்ததால், அவர்களும் இதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தது தன்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியதாக கேப்டன் பிரியா விக்னேஷ் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil