நீதிமன்ற வழக்குகளை குறைக்கும் முயற்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய முதன்முறையாக ஆன்லைன் வெப் போர்டல் தளத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது.
தற்போது, ஆசிரியர்கள் தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்க முறையான ஆன்லைன் தளம் இல்லை. குறைகளைத் தெரிவிக்க ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும்.
இதனால், ஆசிரியர்களுக்கு பல்வேறு சந்தேகம், குழப்பம் ஏற்படுகிறது. அதிகாரிகள் தங்கள் புகார்களை ஏற்றுக் கொண்டார்களா அல்லது அலட்சியப்படுத்தினார்களா? என எந்த விவரமும் இல்லை. இறுதியாக நீதிமன்றங்களையே அணுக வேண்டி உள்ளது எனக் கூறுகின்றனர்.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி கூறுகையில், தற்போது உள்ள நடைமுறைகளில் பல பிரச்சனைகள், குழப்பங்கள் உள்ளன. நேரடியாக மனு கொடுப்பதிலும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதிலும் தாமதம் ஏற்படுவதால் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றனர்.
பள்ளிக் கல்வித் துறையை தொடர்பாக 60% அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இடமாற்றம், ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக அரசுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி அடிக்கடி போராட்டங்கள் நடத்துவது மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கும் வகையில் உள்ளது.
எனவே, ஆசிரியர்களின் பிரச்னைகளை வெளிப்படைத் தன்மையுடன் தீர்க்கும் வகையில், அதை ஆன்லைனில் கொண்டு வர, மாநில அரசு முடிவு செய்துள்ளது, இது தொடர்பாக, ஆன்லைன் மூலம் புகார்களைப் பெற விரிவான 'குறை தீர்க்கும் பிரிவு' அமைக்கப்படும் என்றார்.
மேலும் ஆன்லைன் தளம் மூலம் ஆசிரியர்கள் தங்கள் புகாரின் நிலை குறித்து கண்டறிய முடியும் என்றும் கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார். புகார்களின் நிலை தினசரி அடிப்படையில் பதிவேற்றப்படும். புகார் மீதான நடவடிக்கையின் முடிவில் திருப்தி இல்லை என்றால் புகார்தாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“