யூடியூபர் டி.டி.எஃப் வாசன் கையில் பாம்புடன் வீடியோ வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், அவர் வீடியோவில் கூறிய செல்லப் பிராணிகள் கடையில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் யூடியூபர் டி.டி.எஃப் வாசன். அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, திருப்பதி கோவிலில் குறும்பு வீடியோ எடுத்தது, ‘மஞ்சள் வீரன்’ படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி விலகியது என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்த வரிசையில் தனது கையில் பாம்பு ஒன்றை சுற்றியபடி யூடியூபில் வீடியோ வெளியிட்டிருக்கிறார் டி.டி.எஃப் வாசன். 2 வயதாகும் அந்த பாம்பிற்கு பப்பி எனப் பெயரிட்டுள்ளதாகவும் மகாராஷ்டிரா வனப்பகுதியில் டிரெக்கிங் சென்றபோது பார்த்ததாகவும், அங்கு இருந்து கொண்டு வந்ததாகவும் டி.டி.எஃப் வாசன் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும், கையில் கட்டியிருக்கும் அந்த பாம்பிற்கு முத்தமிட்டு செல்லம் கொஞ்சும் டி.டி.எஃப் வாசன், அந்த பாம்பிற்கு தானே தாய், தந்தையாக இருந்து பாதுகாப்பு கொடுப்பேன் எனவும் பேசி பகீர் கிளப்பியிருக்கிறார். வீடியோ வைரலான நிலையில் வனத்துறை அதிகாரி டி.டி.எஃப் வாசனிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் சட்ட வல்லுநர்கள் ஆலோசனையோடு வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்றே தான் பாம்பை வீட்டில் வளர்த்து வருவதாக டி.டி.எஃப் வாசன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், டி.டி.எஃப் வாசன் வீடியோவில் சொன்ன ஒரு தகவலால், சென்னை திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனை கடையில் வனத்துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது. டி.டி.எஃப் வாசன் கையில் பாம்பு உடன் வெளியிட்ட வீடியோவில், சில நாட்களுக்கு முன்பு அந்த கடையில், தனது பாம்புக்கு கூண்டு வாங்கிச் சென்றதாகவும், அங்கு பாம்பும் விற்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.
டி.டி.எஃப் வாசன் சொன்ன தகவலின் அடிப்படையில் திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனை கடையில் இன்று வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறை அதிகாரிகள் அரியவகை கிளி மற்றும் ஆமையை கைப்பற்றி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“