சமீபத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்த மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மக்களவை தேர்தலுக்கான தி.மு.க வார் ரூம் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர். சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். இவர் 1989 முதல் 1991 வரை தி.மு.க ஆட்சியில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றியவர். மேலும், 1996 முதல் 2001 வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும், 2002 முதல் 2008 வரை தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.
இந்தநிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்து வந்த ஆர்.சண்முக சுந்தரம், கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஆர்.சண்முகசுந்தரம் பதவியில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. மேலும், அரசு பொறுப்பில் இருந்து விலகி தனிப்பட்ட முறையில் தனது வழக்கறிஞர் பணியை ஆர்.சண்முக சுந்தரம் தொடர உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தி.மு.க அமைத்துள்ள மக்களவை தேர்தல் வார் ரூமில் ஆர்.சண்முகசுந்தரத்திற்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தி.மு.க சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் வழக்குகளை எதிர்கொள்வதற்கான நீதிமன்றக் குழுவில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“