scorecardresearch

எம்எல்ஏ-ன்னா இப்படி இருக்கணும்… 1959-ல் கருணாநிதி எழுதிய கடிதம்; வியந்து வெளியிட்ட கரூர் ஆட்சியர்!

Former CM M,.Karunanithi Letter Viral : முன்னாள் முதல்வர் கருணாநிதி சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கைப்பட எழுதிய ஆய்வுக்குறிப்பு தற்போது வைரலாகி வருகிறது.

எம்எல்ஏ-ன்னா இப்படி இருக்கணும்… 1959-ல் கருணாநிதி எழுதிய கடிதம்; வியந்து வெளியிட்ட கரூர் ஆட்சியர்!

தமிழக அரசியல் வரலாற்றில் 5 முறை முதல்வராக இருந்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. கடந்த 1957-ம் ஆண்டு முதல்முறையாக கரூர் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு 8296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர் கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனது சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தமிழகத்தில 13 முறை எம்எல்ஏவாக இருந்த கருணாநிதி, சென்னை சேப்பாக்கம், சைதாபேட்டை, அண்ணாநகர், துறைமுகம், கரூர் குளித்தலை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில், 1957-ம் ஆண்டு முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் 15 எம்எல்ஏக்களுடன் சட்டசபைக்கு சென்றார். அப்போது தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்திருந்தது.  இந்நிலையில், தான் எம்எல்ஏவாக இருந்த சமயத்தில் கருணாநிதி காங்கிரஸ் அரசுக்கு எழுதிய கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுமார் 60 வருடங்களுக்கு முன்பு எழுதிய இந்த கடிதத்தை தற்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டம் வேங்காம் பட்டியில், உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், தனது ஆய்வுக்கான குறிப்புகளை பதிவேட்டில் குறிப்பிடும்போது, 1959-ம் ஆண்டு அப்போதைய குளித்தலை எம்எல்ஏவாக இருந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பள்ளியை ஆய்வு செய்து தனது கைபட எழுதிய ஆய்வுக்குறிப்புகளை பார்த்துள்ளார்.

அந்த ஆய்வுக்குறிப்புகளை பார்த்து வியந்து ஆட்சியர் உடனடியாக இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், ஆட்சியராக வேங்காம்பட்டியில் எனது முதல் ஆய்வின்போது புதையலை கண்டெடுத்துள்ளேன். 1959-ம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏவாக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநதி எழுதிய ஆய்வுக்குறிப்பு இது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் ” இன்று வேங்காம்பட்டி மாவட்ட மன்ற ஆரம்ப பாட சாலையை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 102இல் இன்று வருகை தந்திருந்தவர்கள் 71 பேர். இந்த பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் பகுதி உளுத்து போயிருக்கின்றன. அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றி வருவதாக பொதுமக்கள் பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் இன்னும் அதிகமாக கவனிக்கப்படுதல் நன்று”.

அன்புள்ள
மு. கருணாநிதி

தேதி: 26.6.1959

என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குறிப்பை பார்த்த திமுக தொண்டர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu former cm karunanidhi written a letter now going on viral after 62 years