பல்கலைகழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது ஆளுனரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதில் ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதற்கு ஆளுனர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021- செப்டம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஆளுனராக பொறுப்பு வகித்தவர் பன்வாரிலால் புரோகித். தற்போது பஞ்சாப் மாநிலத்தின் ஆளுராக பொறுப்பேற்றுள்ள அவர், பஞ்சாப் வேளான் பல்கலைகழகத்தின் துணைவேந்தாராக டாக்டர் சத்பீர் சிங் கோசலை நியமித்தது தொடர்பான அம்மாநில முதல்வர் பகவத் மானுடன் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதனிடையே துணைவேந்தர் நியமனம் குறித்து பேசியுள்ள பன்வாரிலால் புரோகித், அரசியல் சட்டம் என் கையில் உள்ளது. எனக்கு யாரும் உத்தரவிட முடியாது. இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன். பணிகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று பஞ்சாப் அரசு என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், நான் பஞ்சாப் ஆளுனராக நியமிக்கப்படுவதற்கு முன்பு தமிழகத்தில் 4 ஆண்டுகள் 20 பல்கலைகழகங்களுக்கு வேந்தராக இருந்துள்ளேன். அந்த காலகட்டத்தில், சட்டப்படி 27 துணைவேந்தர்களை நியமித்துள்ளேன். அப்போது தமிழகத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. துணைவேந்தர் பதவி ரூ40 கோடி முதல் 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் கல்வித்துறையை ஒழுங்குபடுத்தியுள்ளார். அவரிடம் இருந்து பஞ்சாப் அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தை பாதுகாப்பதாக உறுதி எடுத்துள்துள்ளேன். ஆளுனரின் பொறுப்பு அனைவருக்கும் வழிகாட்டுவது பல்கலைகழகங்களை கவனிப்பது மட்டுமே எது நடந்தாலும் என் கடமையை சரியாக செய்வேன் என்று கூறியிருந்தார்.
பஞ்சாப் ஆளுனரின் இந்த பேச்சு வைரலாக பரவிய நிலையில், தமிழகத்தில் துணைவேந்தர் பதவி விற்பனை செய்யப்பட்டு வந்ததா என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது பஞ்சாப் ஆளுநரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், துணைவேந்தர்களை நியமிப்பது ஆளுனரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதில் தவறு நடந்திருந்தால் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியான உடனே தேடுதல் குழு அமைக்கப்படுகிறது. அந்த குழு 10 பேரை தேர்வு செய்து ஆளுனருக்கு அனுப்புகிறது. அந்த 10 பேரில் 3 பேரிடம் ஆளுனர் நேர்காணல் நடத்துகிறார். இதில் அரசுக்கோ அல்லது உயர்கல்வித்துறைக்கு எவ்வித தொடர்பும் இல்லை. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி வியாபாரம என்பது ஏற்புடையது அல்ல.
பஞ்சாப்பில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுனருக்கு இல்லை என்பதால் தமிழகத்தின் மீது குறை சொல்ல கூடாது. அவ்வாறு துணைவேந்தர் நியமனத்தில் தவறு நடநதிருந்தால் அதற்கு முழு பொறுப்பும் ஆளுனர்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசுக்கோ முதல்வருக்கோ அல்லது கல்வித்துறை அமைச்சருக்கோ இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“