தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 4 பல்கலைக் கழகங்களின் புதிய துணைவேந்தர்களைத் தேர்வுசெய்ய அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்களுக்கு ஆக.13-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை., சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மதுரை காமராஜர் பல்கலை., சென்னை அண்ணா பல்கலை. ஆகிய 4 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களைத் தேர்வுசெய்யும் வகையில் தனித் தனி தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில். அந்த தேடுதல் குழுக்கள் புதிய துணைவேந்தர் பதவிக்கு தகுதியான நபர்களை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக ஆக.13ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உயர்கல்வித் துறை செயலர் சமயமூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக ஒவ்வொரு பல்கலைக் கழகத்துக்கும் தனித்தனி அரசாணைகளை அவர் வெளியிட்டுள்ளார். இந்த தேடுதல் குழு ஒவ்வொன்றும் துணைவேந்தர் பதவிக்கு 3 பேர்களை தேர்வுசெய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை தமிழக அரசு, துணைவேந்தராக தேர்வுசெய்யும்.
முன்பு தேடுதல் குழு 3 பேர் அடங்கிய பட்டியலை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரிடம் சமர்ப்பிக்கும். அதிலிருந்து ஒருவரை ஆளுநர் துணைவேந்தரை தேர்வுசெய்வார். தற்போது பல்கலை. துணைவேந்தரை தமிழக அரசே தேர்வுசெய்யும் வகையில் தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதால், ஆளுநருக்கு பதிலாக தமிழக அரசே புதிய துணைவேந்தரை தேர்வுசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலை. துணைவேந்தர் தேடல் குழுவில் ஹரியானா குருக்ஷேத்திர பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கைலாஷ் சந்திர சர்மா, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிடார் மற்றும் சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ஜி திருவாசகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அண்ணாமலை பல்கலை. தேடல் குழுவில் மனோன்மணியம் சுந்தரனார், பல்கலை. முன்னாள் துணைவேந்தர் கே பிச்சமணி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லாவுதீன் மற்றும் சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மதுரை காமராஜ் பல்கலை. தேடல் குழுவில் மனோன்மணியம் சுந்தரனார், பல்கலை. பேராசிரியர் பிச்சமணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் மற்றும் பேராசிரியர் மணி குமார் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பேராசிரியர் சுஷ்மா யாதவா, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லாவுதீன் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பத்மநாபன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.