த.இ.தாகூர்.கன்னியாகுமரி
கருத்து சேவல் கூவி பொழுது விடியும் நிலை மாறி.உளியின் ஓசையில் ஆதவன் உதிக்கும் மைலாடியில் ஆண்கள் அனைவரும் சிற்பிகள் என்னும் பெருமை மிகுந்த ஊர் மைலாடி.(சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவில் பணிக்கு தஞ்சாவூரில் இருந்து வந்த சிற்ப கலைஞர் குடும்பங்களில். கோவில் பணி நிறைவடைந்து பெரும்பான்மையோர் தஞ்சைக்கு திரும்பிய காலத்தில் சில சிற்ப கலைஞர்கள் குடும்பத்துடன் மைலாடியில் தங்கி விட்டதின் தொடர்ச்சியே இன்று இங்கு வசிக்கிற 500-க்கும் அதிகமான சிற்பிகள்.)

சிற்பம்
அதன் கலைக்கும் தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி ஒரு மாபெரும் அடையாளமாக விளங்குகின்றது. இங்கு இக்கற்சிற்பங்களை செதுக்கும் கலையில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இங்கு செதுக்கப்படும் சாமி சிலைகள், தலைவர்கள் சிலைகள், விலங்குகளின் சிலைகள், வீட்டு அலங்கார சிலைகள் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, மஹாராஷ்டிரா, அந்தமான் மற்றும் வெளி நாடுகளான அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு என பல நாடுகளுக்கும் கடல் கடந்த பல வெளி நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் மயிலாடி கற்சிலைகளின் புகழ் உலகம் முழுவதிலும் பரவியுள்ளது.

இந்நிலையில் மயிலாடி கற்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு அங்கிகாரம் கிடைத்துள்ளது. இது தங்கள் கல்சிற்ப கலைக்கு கிடைத்த பெருமை என மயிலாடி கற்சிற்ப கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் கடந்த சில ஆண்டுகளாக குமரி மாவட்டத்தில் கற்கள் வெட்டி எடுப்பதற்கு தடை இருந்து வருவதால் தங்கள் வாழ்வாதாரம் அடியோடு தலைகீழாக மாறியுள்ளது. கற்சிலைகள் செய்ய தரமான கற்கள் கிடைக்காததால் இங்குள்ள சிற்பக் கலைஞர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக விலையில் கற்களை வாங்கி வருகின்றனர்.
மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் கற்களும் சிலைகள் வடிப்பதற்கு தகுந்தவாறு இல்லாமல்(கல்லில் ஆண்,பெண் என இருவகை உள்ளது. இதில் பெண் கல் தான் சிற்பத்திற்கு ஏற்ற வகை) கற்கள் கொண்டு வர போக்குவரத்து செலவும் அதிகமாக உள்ளது. இதனால் கற்சிற்ப கலைஞர்களின் வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தங்கள் குடும்பங்களை காப்பாற்ற பலர் இக்கற்சிற்ப கலையை விட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.

எனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ள கற்சிற்ப கலையும், கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்கள் குடும்பங்களையும் பாதுகாக்கும் பொருட்டு குமரி மாவட்டத்தில் உள்ள கற்களை சட்ட வரைமுறைக்கு உட்பட்டு கற்சிற்ப தொழிலுக்கு வெட்டி எடுக்க அனுமதி தருவதோடு அதனை மானிய விலையிலும்,வரி விலக்கும் தந்து அரசு உதவ வேண்டும் என மயிலாடி கற் சிற்ப கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அத்துடன் சிற்பிகளின் இன்றைய வழித்தோன்றல் குடும்ப இளைஞர்கள். தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலினுக்கு வைத்திருக்கும் கோரிக்கை. கலைஞர் குமரி கடற்பாறையில் வான் தொடும் உயரத்தில் ஐயன் திருவள்ளுவர் சிலை நிறுவி உலக புகழ் பெற்றார். கலைஞர் கருணாநிதி உருவாக்கிய சிலையின் நிழலில்.குமரியில் கல் சிற்ப கலை கல்லூரியை உருவாக்கி தரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்,(தமிழகத்தில் சிற்ப கலை கல்லூரி மகாபலிபுரத்தில் மட்டுமே உள்ளது)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“