திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்குகிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் இன்றும், நாளையும் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை முன்னிட்டு பழநி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது
இந்த மாநாட்டில் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், நாடகம், நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாநாட்டு வளாகத்தில் 2,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கம், 500 பேர் சாப்பிடும் உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி
மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில், முருகனின் ஆயுதமான வேல், சிவலிங்கம், அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் திருக்காட்சிகள் தத்ரூபமாக ‘பைபா்’ சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்தூண் மண்டபம் போன்று இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்காட்சியில் முருகனின் பல்வேறு திருப்பெயா்கள், முருகன் பெயரிலுள்ள பெண்களுக்கான பெயா்கள், தமிழகம் மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள புகழ் பெற்ற முருகனின் திருக்கோயில்கள் குறித்த விவரங்கள், முருகனின் படைக் கலன்கள் உள்ளிட்ட அரிய தகவல்கள் வண்ண ஓவியங்களுடன் இடம் பெற்றுள்ளன.
அங்கு அமைக்கப்பட்டுள்ள 3-டி திரையரங்கில் பா.விஜய் இயக்கிய முருகனின் பெருமைகள் கூறும் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மாநாடு முடிந்து ஒரு வாரத்துக்குக் கண்காட்சியை பக்தர்கள், பொதுமக்கள் பார்வையிடலாம்.
மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். பழநி பேருந்து நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்து செல்ல 10 பேட்டரி கார்கள், மாநாடு வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோரைஅழைத்துச் செல்ல 10 பேட்டரி கார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டில் மூன்று லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பழனி முழுவதும் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“