திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்ரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி வாயிலாக மாநாட்டை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வீடியோவில் அவர் பேசுகையில், ’பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியை தி.மு.க. வழங்கி வருகிறது. பழனி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர் சிறுவாபுரி, காந்தன் ஆகிய ஏழு முருகன் திருக்கோயில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடுகளில் ரூ. 789 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 69 முருகன் கோவில்களில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயில் சார்பாக நடத்தப்படும் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இது விரிவுபடுத்தப்பட்டு இந்த ஆண்டு மதிய உணவும் வழங்கப்படுகிறது.
பழனி கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்தரம் திருவிழாக்களுக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
பழனி தண்டாயுதபாணி கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று துறை நிலையிலான ஓய்வூதியம் வாங்குகிற 258 ஓய்வூதியதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு ஓய்வூதியம் 3000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இது 4000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதுதவிர 54 ஓய்வூதியதாரர்களுக்கு 2000 ரூபாய் உயர்த்தி வழங்குகிறோம்.
2024 முதல் தற்போது வரை 813 நபர்கள் அறுபடை வீடுகளுக்கு அரசு சார்பில் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்காக கட்டணமில்லா முடிக்காணிக்கை செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், முடி காணிக்கை பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
ரூ. 5,570 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இந்த சாதனைகளுக்கு மகுடமாக இன்று பழனி முத்தமிழ் மாநாடு நடைபெறுகிறது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும். அதற்கு திராவிட மாடல் அரசு தடையாக இருந்ததில்லை. எல்லோருக்கும் எல்லாமும் என்பது தான் திராவிட மாடல் அரசு. கோவில் வளர்ச்சிக்கும் அதில் பணியாற்றுபவர்களின் முன்னேற்றத்திற்கும் தி.மு.க., அரசு பணியாற்றி வருகிறது. .
ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். திருக்கோயில் கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும்’.
இவ்வாறு ஸ்டாலின் அந்த வீடியோவில் பேசினார்.
பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் இன்றும், நாளையும் நடைபெறும் மாநாட்டை முன்னிட்டு பழநி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த மாநாட்டில் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், நாடகம், நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாநாட்டையொட்டி பழனி முழுவதும் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“