தமிழக அரசின் ஆவணங்கள், அறிக்கைகள் உள்ளிட்டவைகளில் இனி திருநங்கை என்ற சொல்லுக்கு பதிலாக மூன்றாம் பாலினத்தவர் என்ற சொல்லை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பாக தயாரிக்கப்பட்ட செய்திக்குறிப்பு, கலெக்டர் எம். கோவிந்த ராவின் ஒப்புதல் பெற்று செய்தி மற்றும் ஊடகத்துறையின் மூலம் நவம்பர் 22ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2020ம் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், திருநங்கை என்ற வார்த்தை மறைக்கப்பட்டு, அந்த இடத்தில் மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அதில் திருநங்கை/கள் என்று டைப் செய்யப்பட்டுள்ள இடங்களில் எல்லாம், மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநங்கை என்ற சொல், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும். மூன்றாம் பாலினத்தவர்களான தங்களை அரவாணி / அரவாணிகள் என்று அழைப்பது தங்களுக்கு ஒருவித அவமானமாக உள்ளது என்ற அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப முன்னாள் முதல்வர் கருணாநிதி, மூன்றாம் பாலினத்தவர்கள் இனி திருநங்கைகள் என்று அழைக்கப்படுவர் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருநங்கை என்ற சொல்லுக்கு பதிலாக, மூன்றாம் பாலினத்தவர் என்ற சொல், இனி பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.