scorecardresearch

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு எவ்வளவு? ஸ்டாலின் அறிவிப்பு

மே மாதத்தில் 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

mk stalin
MK Stalin

மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்க வேண்டிய அகவிலைப்படியை கடந்த ஜனவரி மாதம் 4 சதவீதம் உயர்த்தி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருந்தார்.

மேலும், தற்போது, மே மாதத்தில் 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதைப்பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.

இந்த அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து, கடந்த அரசு விட்டுச்சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை, கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 1.4.2023 முதல் செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.4.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். இதனால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

மேலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும்”, என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu government allowance hike for govt employees