பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க கோவிட்-19 தடுப்பு வழிகாட்டுதல்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகளில் 300 மாடு பிடிக்கும் வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எருது விடும் விழாவில் 150 மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும். அனைத்து மாடுபிடி வீரர்களும் கோவிட்-19 பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும். பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகே அவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காணும் பார்வையாளர்கள் இடங்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். “அனைத்து பார்வையாளர்களும் உடல் வெப்பத் திரையிடலுக்கு உட்படுத்தப்படுவார்கள். முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம்” என்று வழிகாட்டுதல் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இந்த பாரம்பரிய ஜலிக்கட்டுப் போட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளது. விலங்குகள் நல அமைப்புகள் இது ஒரு காட்டுமிராண்டித் தனமான நிகழ்வு என்று கூறினாலும், அரசியல் கட்சிகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் பாரம்பரிமான விழா என்று கூறி ஆதரவு தெரிவித்தனர். மேலும், நாட்டு மாடுகளை பராமரிப்பதற்கான வழி என்றும் கூறுகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"