சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான முதல் அறிக்கையை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தினசரி அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாண்டு வருகிறது. அதேநேரம் இன்னும் 10 வருடங்களில் சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும்.
இதனால் சென்னைக்கு வெளியே பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த விமான நிலையம் சுமார் 5476 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. தமிழக அரசு சார்பாக இதற்கான நிலம் வழங்கப்படுகிறது.
இதற்காக தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்த முடிவு செய்த நிலையில், அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் பலர் குழுக்களாக இணைந்து கடந்த மூன்றரை மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த விமான நிலையத்திற்காக விவசாய நிலத்தை கேட்கிறார்கள் என்று கூறி மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 16 கிராம மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த புதிய விமான நிலையத்தின் திட்ட அறிக்கை முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது நிலம் கையகப்படுத்துவதற்கான முதல்நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் குறித்து ஏப்ரல் 4 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“