உணவுகளை சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்து கொடுப்பதற்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், டீக்கடை மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பர்கள், கவர்கள், சில்வர் பேப்பர் உள்ளிட்ட பொருள்களில் பார்சல் செய்து கொடுத்தால் சம்பந்தப்பட்ட கடை மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உத்தரவை மீறுபவர்கள் முதல் முறையாக கண்டறியப்பட்டால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறையும் இதே தவறு செய்தால், கடையின் உரிமம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் தற்காலிகமாக ரத்து செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்றுப் பொருள்களும் அறிவிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
எனினும், டீ, காபி, சாம்பார் உள்ளிட்ட திரவ உணவு வகைகள் மற்றும் பிரியாணி போன்றவை பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் சில்வர் பேப்பர்களில் பார்சல் செய்து வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் பார்சல் செய்யப்பட்ட உணவுகளை நீண்ட நாள்களுக்கு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் தெரிவித்து வருகின்றனர். இந்த வகையான பிளாஸ்டிக் கவர்கள் தயாரிக்க பயன்படும் வேதிப்பொருள்கள் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. அண்மையில் இது போன்ற பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பொருள்களில் பார்சல் செய்யப்பட்ட உணவுகளில், அதன் கலர் ஒட்டிக் கொண்டிருப்பது போன்ற பல வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பேப்பர்களை பார்சல் செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“