வருகின்ற ஜனவரி மாதம் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 2009ஆம் ஆண்டு, பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிமுகம் செய்தார்.
அதன்படி, அவர் ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ½ கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுப்பை வழங்கப்பட்டது. இந்த திட்டம் 2011ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.

மேலும், 2013ஆம் ஆண்டில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் பொங்கலுக்கு தேவையான முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள், ரூ.100 ரொக்கப்பணம் மற்றும் கரும்பு ஆகிய பொருட்களுடன் இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விரிவுப்படுத்தினார்.
மேலும் 2017ஆம் ஆண்டு, பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. ரூ.100 ரொக்கப்பணம் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு 2019-2020 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 பணம் கொடுக்கப்பட்டது. மேலும் பரிசு தொகுப்பில், குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய 21 பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் தற்போது வரவிருக்கும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரிசு தொகுப்புக்குப் பதிலாக ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் மனநிலையில் தமிழக அரசு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இன்னும் தமிழக அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
ரேஷன் அட்டை வைத்துள்ள பொதுமக்கள், தங்களின் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1,000 ரொக்க பணமும் சேர்த்து வழங்கமாறு எதிர்பார்கின்றனர். ஓரிரு நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil