சென்னை, ஜூன் 24, 2025: தமிழ்நாட்டில் நிலவும் நிதி நிலைமை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசுக்கு எதிரான நிதி தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவது மற்றும் ஒப்பந்ததாரர்களுக்குச் செலுத்த வேண்டிய தொகைகள் நிலுவையில் இருப்பது போன்ற காரணங்களால், மாநில அரசு நிதி நெருக்கடியில் உள்ளதா என நீதிமன்றம் சந்தேகம் எழுப்பியுள்ளது.
சமையல் எண்ணெய் சப்ளை வழக்கு - பின்னணி
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், தமிழக மக்களுக்கு வழங்குவதற்காக சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் வெற்றி பெற்று, சமையல் எண்ணெய் சப்ளை செய்த கே.டி.வி. ஹெல்த் ஃபுட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், தங்களுக்கு அரசு ரூ.141 கோடியே 22 லட்சம் வழங்க வேண்டியுள்ளதாகவும், டெண்டர் நிபந்தனைப்படி 30 நாட்களில் இந்தத் தொகையை வழங்க வேண்டும் என்பதால், நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.டி.வி. நிறுவனம் தரப்பில், தொடர்ந்து சமையல் எண்ணெய் சப்ளை செய்து வருவதால், இந்தத் தொகை ரூ.200 கோடிக்கும் மேல் அரசு வழங்க வேண்டியுள்ளதாகவும், தொகையை வழங்காமல் அடுத்த டெண்டர் கோரும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த இரண்டு வாரங்களாக ஓய்வுக்கால பலன்கள் வழங்கப்படவில்லை என்றும், அரசு வழங்க வேண்டிய தொகைகள் வழங்கப்படவில்லை என்றும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.
மேலும், "மாநிலத்தில் என்ன நடக்கிறது? மாநில அரசு முன்னுதாரணமாக திகழ வேண்டும். நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகைகளை வழங்காமல் இருப்பது எதைக் காட்டுகிறது? வழங்க வேண்டிய தொகைகளை வழங்க வேண்டாம் என அரசு நினைக்கிறதா? அல்லது மாநிலத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா?" என அரசு தரப்புக்கு நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர், "இது அரசை நடத்தும் வழியல்ல எனவும், அரசு குறித்த நீதிமன்றத்தின் இந்த எண்ணத்தை மாற்றப்பட வேண்டும்" எனவும் தெரிவித்தார்.