தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அரசு பள்ளி சத்துணவு மையத்திலிருந்து மதிய உணவு திட்டம் மூலம் ஜூன் மாதம் முதல் உணவு விநியோகிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மனவளர்ச்சி குன்றியோருக்கான இந்தச் சிறப்பு பள்ளிகளில் 5,725 மாணவர்கள் தினசரி வந்து செல்லும் மாணவர்களாக பயின்று வருகின்றனர். இவர்களுக்கான மதிய உணவினை தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே சமைத்து வழங்கி வருகின்றன. பிற இடங்களில் சமைக்கப்பட்டு கொண்டு வரப்படும் உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், மதிய உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சத்துணவு மையத்திலிருந்து ஜூன் மாதம் முதல் சிறப்பு பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு உணவு விநியோகிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மதிய உணவினை உரிய நேரத்தில் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு உணவை முறையாக வழங்கிட பொறுப்பாளர்களை நியமிக்கவும், தேவையான தட்டு, டம்ளர் உள்ளிட்ட உபகரணங்களையும் ஏற்பாடு செய்ய மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“