Advertisment

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் அரசுக்கு இழப்பு

லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை மேற்கொள்ளக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீக்க நீதிபதிகள் மறுப்பு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
New Secretariat office, புதிய தலைமைச் செயலகம்

New Secretariat office

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் அரசுக்கு 375 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல். 2006-2011 தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் தடையை நீக்க கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவில் நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதுடன்,  விசாரணை தொடர்பான ஆவணங்களை பெற்று, அவற்றை பரிசீலித்து முகந்திரம் இருந்தால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து ரகுபதி ஆணையத்திடம் இருந்து பெறபட்ட ஆவணங்களை கடந்த செப்டம்பர் 24 ஆம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  இதனையடுத்து  ஆணையத்திடம் இருந்து பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் குற்ற வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறை முயற்சிப்பதாகவும் தனி நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் பிறப்பித்த  உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த மனு கடந்த 12 ஆம் தேதி நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், கே. கல்யன சுந்தரம் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்த போது. தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உயர் நீதிமன்றம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி, ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆரம்பகட்ட விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இல்லாவிட்டால் வழக்கு கைவிடப்படும். தற்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என விளக்கமளித்தார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மனு மீது அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மற்றவர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். அதனால், கருணாநிதி மனு மீது பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள கூடாது. தனி நீதிபதி உத்தரவை கொண்டு அரசியல் ஆதாயம் தேட ஆளும் கட்சிகள் என்னுகின்றது எனவே தனி நீதிபதி உத்தரவிற்கு தடக விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட  நீதிபதிகள், புதிய தலைமைச் செயலக கட்டிட விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி உத்தரவை பொறுத்தவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். அந்த உத்தரவின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை மேற் கொண்டு எந்த நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் குலுவாடி ஜி ரமேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ஆணைய விசாரணையை எதிர்த்த வழக்கை வாபஸ் பெறுவதாக தங்கள் தரப்பில் தெரிவித்த பிறகு அந்த வழக்கை நேரடியாக முடித்துவைக்காமல், லஞ்ச ஒழிப்பு துறை போன்ற விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தனி நீதிபதி பரிந்துரைத்திருப்பது தவறு என வாதிட்டார்.

மேலும், விசாரணை ஆணையம் வைத்திருந்த ஆவணங்களை தமிழக அரசு முழுமையாக ஆராயாமல் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு மாற்றியது செல்லாது என்றும் ஆணையம் அறிக்கை அளித்து இருந்தால் அதனை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு இருக்க வேண்டும் ஆனால் இந்த விஷயத்தில் ரகுபதி ஆணையம் எந்தவிதமான இறுதி அறிக்கையில் அல்லது இடைக்கால அறிக்கையை தமிழக அரசுக்கு தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தார் எனவே அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், புதிய தலைமைச் செயலக கட்டிடம் முறைகேடு தொடர்பாகவும் என்ன நடந்துள்ளது என விசாரித்த அறிக்கை தாக்கல் செய்ய ரகுபதி ஆணையம் ஒரு  எஸ்.பி பதவி கொண்ட அதிகாரியை நியமித்ததாகவும்,   அவர் விசாரித்து, ஆணையத்திற்கு அளித்த 400 பக்க அறிக்கையில் 375 கோடி ரூபாய்க்கு தமிழக அரசுக்கு இழப்பு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவித்தார். அந்த அறிக்கையையும், ரகுபதி ஆணையம் சேகரித்த தகவலையும் முழுமையாக ஆராய்ந்த பிறகே லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு மாற்றியுள்ளதாக தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு துறை மேற்கொண்டு நடவடிக்களை தொடரக்கூடாது என்ற கடந்த வார உத்தரவால் விசாரணை செய்ய முடியவில்லை என்பதால் இடைக்கால உத்தரவை நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அப்போது குறுக்கிட்டு நீதிபதிகள், அரசு அமைத்த விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு, இடைக்கால அல்லது இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டாத? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விசாரணை ஆணையம் எந்த அறிக்கையும் அரசுக்கு தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், ஆணையம் எவ்வித இறுதி முடிவும் எடுக்காமல் கலைக்கப்பட்ட, பிறகு அவர்கள் வைத்திருந்த ஆவணங்கள்  அடிப்படையில் எப்படி  மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பி இதுதொடர்பாக முழுமையான விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை மேற்கொள்ளக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment