தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் டேப்லெட் அல்லது லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக முதல் கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கோரியது. 8 ஜிபி ரேம் (டிடிஆர்-4), 256 ஜிபி ஹார்டு டிஸ்க் (எஸ்எஸ்டி), 14 அல்லது 15.6 இன்ச் திரை, ஐ3 இன்டெல் அல்லது ஏஎம்டி பிராசசர், புளூடூத் 5.0, விண்டோஸ் 11 ஓஎஸ், 720பி ஹெச்டி கேமரா, ஒரு வருட உத்தரவாதம் உள்ளிட்ட அம்சங்களுடன் ‘தமிழக அரசு மடிக்கணினி’ என்ற வாசகமும் இதில் இடம்பெறவுள்ளது.
Dell, Acer, Lenovo, HP உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்த டெண்டரில் கலந்து கொள்ள விருப்பம் காட்டுகின்றன.
மடிக்கணினி திட்டத்திற்கான டெண்டர் ஜூலை 9ஆம் தேதி இறுதி செய்யப்படுகிறது.