Tamil Nadu government likely to borrow rs 25800 crore : ரிசர்வ் வங்கியின் கடன் நாள்காட்டியின் படி, 2021-22 இறுதி காலாண்டில் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலம் தமிழக அரசு ரூ. 25 ஆயிரத்து 800 கோடி மாநில வளர்ச்சி கடனை வாங்க உள்ளது. இது கடந்த ஆண்டு வாங்கப்பட்ட ரூ. 25 ஆயிரம் கோடி கடனைக் காட்டிலும் சற்று அதிகம். இது தொடர்பான இன்று வெளியிடப்பட்ட தி இந்து ஆங்கில நாளேட்டின் சென்னை பப்ளிகேஷனில் இடம் பெற்றுள்ள செய்தியின் சுருக்கம் கீழே.
2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை மாநில அரசு ரூ. 52 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் வாங்கப்பட்ட ரூ. 63 ஆயிரம் கோடியைக் காட்டிலும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தின் மொத்த செலவினம் (expenditure) மொத்த வருவாயை விட அதிகமாகும் போது ஏற்படும் நிதிப் பற்றாக்குறைக்கு (Fiscal Dificit) சமாளிப்பதற்காக மாநிலங்கள் கடன் பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக மாநில வளர்ச்சிக் கடன்கள் உள்ளன. 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் குறிப்பிட்டவாறே தமிழகத்தின் கடன் திட்டமும் அமைந்துள்ளது என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி இழப்பீடாகப் பெறப்பட்ட ரூ. 8,095 கோடியைத் தவிர்த்து, 2021-22ல் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.92,529.43 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 4.33% ஆகும். 15வது நிதிக் குழுவின் (Finance Commission) பரிந்துரைகளை ஏற்று, 2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4% வரை கடன் வாங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மின்சாரத்துறையில் சீர் திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு கூடுதல் வரம்பாக 0.5% கடன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதி அறிக்கை தாக்கல் செய்யும் போது தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்ற மாநில அரசின் அடிப்படைக் கொள்கையில் சமரசம் செய்யாமல் கூடுதலாக அனுமதிக்கப்பட்டிருக்கும் 0.5% வரம்பில் 0.35% கடனை தமிழக அரசு பெறும் என்பதில் நம்பிக்கை உள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த நிதி ஆண்டில் மாநிலத்தின் வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்ட போதும் செலவினங்கள் அதிகமாகவே உள்ளது. 2021ம் ஆண்டின் ஏப்ரல் – நவம்பர் காலங்களில் மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ. 1,18,992.48 கோடியாக உள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாயைக் காட்டிலும் 22% அதிகம். ஆனாலும் செலவினம் ரூ. 1,49,044.19 கோடியாக உள்ளது. இதனால் ஏற்பட்டிருக்கும் நிதி பற்றாக்குறை ரூ. 30,051.71 கோடியாக உள்ளது. வருவாய் வரவுகளை விட வருவாய் செலவினம் அதிகமாக இருப்பதைக் குறிக்கும் வருவாய் பற்றாக்குறை மட்டும் சுமார் ரூ. 7,869.87 கோடியாக உள்ளது.
2022ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் காலங்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த சந்தைக் கடன்களின் மதிப்பு ரூ.3,09,971.74 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஆர்.பி.ஐ. அறிவித்துள்ளது. ரேட்டிங் ஏஜென்சியான ஐ.சி.ஆர்.ஏ. தரவுகள் படி கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்கள் இந்த இறுதி காலாண்டில் அதிக அளவு கடன் வாங்க உள்ளது. ஜூன் 2022க்குப் பிறகு ஜி.எஸ்.டி. இழப்பீடு நிறுத்தப்படும் என்ற கவலையும், 2023-ல் கடன் உச்ச வரம்பு குறைக்கப்படும் என்ற அச்சமும் அதற்கு காரணமாக இருக்கலாம்.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் மீளவில்லை என்ற காரணத்தால் குறைந்தது 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடருமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 2022-23 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டிபியில் 5% எந்த நிபந்தனையும் இல்லாமல் கடன் வாங்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராடுவதற்கு மாநிலங்கள் அதிக அளவில் செலவு செய்தது என்பதும், வருவாயில் கணிசமான குறைப்பு ஏற்பட்டிருப்பதால் இந்த மாற்றங்கள் தேவை என்று அவர் கூறியுள்ளார். கொரோனா தொற்றின் மூன்றாவது அலையால் ஏற்படும் எந்தவொரு கடுமையான தாக்கமும் தமிழகத்தின் நிதிநிலையை மேலும் மோசமடைய செய்யும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil