கேரளாவை மீண்டும் தாக்கக் காத்திருக்கும் தென்மேற்கு பருவ மழை : 14 மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு மற்றும் பவானி சாகர் அணையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

வெள்ள அபாய எச்சரிக்கை
இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் சிறுதொணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர்

தென்மேற்கு பருவமழை : தென்னிந்தியாவில் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கேரளாவில் கடந்த பத்து நாட்களாக கனத்த மழை பெய்ததின் விளைவாக அம்மாநிலத்தில் இருக்கும் அனைத்து அணைகளிலும் நீர் நிரம்பியது. அதற்குப் பின்பும் மழையின் வரத்து அதிகரித்ததால், அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை

உபரிநீர் திறந்துவிடப்பட்ட காரணத்தால் கேரளாவெங்கும் மழையின் வெள்ள நீர் சூழ்ந்துவிட்டது. இம்மழைக்கு சுமார் 35 பேர் பலியாகியுள்ளனர். கேரள எல்லைகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழக அணைகளும் நிரம்பிவருகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் சுமார் 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் எந்நேரமும் அந்த அணை நிரம்பும் சூழல் உருவாகியுள்ளது. 142 அடி வரை தண்ணீரை சேமிக்க முடியும். ஆனால் நீரின் வரத்து அதிகரித்து வந்த காரணத்தால் இன்று அதிகாலை 3.30 மணிக்கு அணையின் 13 மதகுகளும் திறந்துவிடப்பட்டன.

இதனால் 4 ஆயிரத்து 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் முல்லைப் பெரியாறு நதியோரம் இருக்கும் தேனி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்பட தொகுப்பு

11 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பும் பவானி சாகர் அணை

பவானி சாகர் அணையின் மொத்த உயரம் 105 அடியாகும். தொடர் மழை காரணமாக பில்லூர் அணையில் இருந்து பவானி சாகர் அணைக்கு 38 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

பவானி சாகர் அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருகின்ற காரணத்தால் 10 ஆயிரம் கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. பவானி சாகர் அணையின் மதகுகளை நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் திறந்து வைத்தார்.

ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு பவானி சாகரில் நீர் நிறைவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

கேரளாவை மீண்டும் தாக்கக் காத்திருக்கும் தென்மேற்கு பருவ மழை

கடந்த வாரம் பெய்த மழையில் இருந்தே இன்னும் முழுமையான விடுதலையை அடையாத கேரளாவிற்கு மீண்டும் சோதனை. மீண்டும் கேரளத்தில் மழை  வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கையை அறிவித்திருக்கிறது கேரள அரசு.

மொத்தம் 14 மாவட்டங்களைக் கொண்ட கேரளாவில் வெள்ளத்தினால் வயநாடு, கோழிக்கோடு, எர்ணாக்குளம், இடுக்கி மாவட்டங்கள் பலத்த சேதாரம் அடைந்தன. 12 மாவட்டங்களில் ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் மீதம் இருக்கும் இரண்டு மாவட்டங்களான கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை
வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்படுள்ள கேரள மாவட்டங்கள்

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu government opened the sluice gates of the mullaperiyar dam at 1 30 am to release excess water from the reservoir

Next Story
டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்க: ராமதாஸ்ramadoss
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com