கஜ புயல் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : ஒவ்வொரு ஆண்டும் சென்னை மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் புயல் மற்றும் கனமழையின் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியாக உருவாகியிருப்பது தான் கஜ புயல். சென்னைக்கு வடகிழக்கே, வங்கக் கடலில் புயல் நிலைக் கொண்டிருக்கிறது.
சென்னைக்கு கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது கஜ புயல். வங்கக் கடலில் உருவாகியிருக்கும் இந்த புயல் மணிக்கு 5 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது.
நாளை மறுநாள் (15/11/2018) அன்று புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட நாட்களில் புயல் வலுவாகி, கரையைக் கடக்கும் போது புயலின் வேகம் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மென் தன்னுடைய முகநூல் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
கஜ புயல் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கஜ புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன மேற்கொள்ள வேண்டும் என்று உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அறிவித்தார் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கஜ புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுதல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள், மருத்துவக் குழுக்கள், ஜெனரேட்டர்கள், நடமாடும் மீட்புக் குழுக்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. களத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் பணியில் இருப்பது உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை அறிந்து கொள்ள கட்டுப்பாட்டு அறைகள் இயக்கப்படும் என்பதால் ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். கஜ புயல் பற்றிய லைவ் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள
மூன்று முறை திசை மாறிய கஜ புயல்
ஆரம்பத்தில் சென்னை - ஸ்ரீஹரிஹோட்டாவில் புயல் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டது. பின்னர் சென்னை - நாகை மத்தியில் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய காலை நிலவரப்படி கடலூர் மற்றும் பாம்பன் பகுதிகளுக்கு இடையில் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆகவே புயலின் திசையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ஆர்.பி. உதயக்குமார் கூறியிருக்கிறார்.
மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் 14ம் தேதி முதல் காற்று வீசும் என்பதால் கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 2559 பகுதிகளில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகம் விரைந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள்
கஜ புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 8 தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் சிதம்பரம் வந்தடைந்துள்ளன. நாகை - 3, சென்னை - 1, சிதம்பரம் - 2, கடலூர் - 1, ராமநாதபுரம் - 1 என குழுக்கள் பிரிக்கப்பட்டு அனுப்பப்பட உள்ளனர்.
தயார் நிலையில் இருக்கும் மாநில தேசிய மீட்புக் குழு
சென்னைக்கு ஒரு குழு, கடலூருக்கு ஒரு குழு மற்றும் நாகை மாவட்டத்திற்கு இரண்டு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளனர். காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.
பாதுகாப்பு நிலையில் இருக்கும் குழுக்கள்
தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை மீட்க படகுகள் தயார் நிலையில் இருக்கிறது. ஜே.சி.பி இயந்திரங்கள் 1618, மரம் அறுக்கு இயந்திரங்கள் 1454, படகுகள் 1032, ஜெனரேட்டர்கள் 1441, தண்ணீர் இரைக்கும் பம்புகள் 1463, நீச்சல் வீரர்கள் 1125, பாம்பு பிடிப்பவர்கள் 657 என அனைவரும் தயார் நிலையில் இருப்பதாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார் அமைச்சர் உதயக்குமார்.