Arun Janardhanan
Tamil Nadu government schools get smart boards : சமீபத்தில் ஃபின்லாந்து சென்று திரும்பிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் தினத்தன்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், காலம் காலமாக பள்ளிகளில் இருக்கும் கரும்பலகைகள் மாற்றப்பட்டு அவற்றிற்கு பதிலாக டிஜிட்டல் போர்ட்கள் பொருத்தப்படும் என்று கூறியுள்ளார். க்யூ.ஆர். கோடுடன் கூடிய ஸ்மார்ட் ரிப்போர்ட் கார்ட்கள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஃபின்லாந்தில் பின்பற்றப்படும் கல்வி முறைகளை ஆராய்ந்து, அவற்றில் நம் மாநிலத்திற்கு தேவையானது எதுவோ அதை தேர்வு செய்து நடைமுறைப்படுத்தும் வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
ஃபின்லாந்தை முன் மாதிரியாக கொண்டு செயல்பட இருக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை
ஏற்கனவே, பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் அளிக்கப்படுவது போலவே ஆசிரியர்களுக்கும் லேப்டாப்கள் வழங்கப்படுவதற்கான திட்டங்களை அவர் அறிவித்தார். தமிழக மாணவர்களுக்கான கல்வித் தரத்தினை உயர்த்தும் பொருட்டு, புதிய திட்டங்களை அறிமுகம் செய்தல் தமிழக அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. இலவச லேப்டாப் திட்டங்களை பார்த்து அண்டை மாநிலத்தில் இருப்பவர்களும் இதை போன்ற ஒன்றை நடைமுறைப்படுத்த இருக்கும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறார்கள். எந்த கட்சி ஆட்சி செய்தாலும், எத்தனை ஆட்சிகள் மாறினாலும் கல்வியைப் பொறுத்தவரை மாணவர்களுக்கான சரியான திட்டத்தை அமல்படுத்த யாரும் மறந்ததில்லை. இது தமிழகத்துக்கே உரித்தான சிறப்பு என்றாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
1960-களில் பள்ளிகளுக்கு படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக இருக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதில் மாணவர்கள் பயன்பெறவும் வழிவகை செய்தனர்.
ஸ்மார்ட் ரிப்போர்ட் கார்ட்கள் குறித்து கல்வித்துறை செயலாளர்
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் இணைந்து ஃபின்லாந்து சென்று திரும்பிய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ப்ரதீப் யாதவ் கூறுகையில் “ஃபின்லாந்தில் இருக்கும் சிறப்பான கல்வித்திட்டங்களை அப்படியே இங்கு செயல்படுத்த இயலாது என்றாலும் சில மாற்றங்களை ஏற்படுத்தி சிறப்பான பள்ளிக் கல்வி அனுபவத்தினை குழந்தைகளுக்கு நம்மால் ஏற்படுத்த இயலும்” என்று கூறினார். க்யூ.ஆர் கோட் மூலமாக ஸ்மார்ட் ரிப்போர்ட் கார்ட்கள் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அனுப்ப இயலும். அவர்கள் அதன் மூலமாக அவர்கள் குழந்தைகளின் வருகைப் பதிவு, மதிப்பெண்கள், ஒட்டுமொத்த செயல்பாடு ஆகியவற்றை எளிதாக அறிந்து கொள்ள இயலும் என்று அவர் கூறினார்.
தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்காக கல்வி என்ற டிவி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 50 அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்ட குழு ஒன்று, தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு உதவினார்கள். தற்போது அரசு கேபிள் டிவி நெட்வொர்க்கில் இந்த டிவியை பார்க்க இயலும். ஆனால் பொதுமக்கள் பலரும் இந்த நெட்வொர்க்கில் இல்லாததால், அவர்களுக்கு இந்த டிவி சென்று சேர்வதில் பிரச்சனை இருக்கிறது. ஆசிரியர்களால் நடத்தப்படும் அனைத்துப் பாடங்களையும் நாங்கள் யூ.டியூப்பிலும் அப்லோட் செய்கின்றோம். இதனால் பள்ளி மாணவர்கள் தங்களின் வகுப்புகளை ஒரு வேலை மிஸ் செய்துவிட்டாலும் கூட, யூ.டியூபில் இந்த வகுப்புகளை பார்த்துக் கொள்ளலாம்.
கல்விக்காக மாநில அரசு ஒதுக்கும் நிதி
கடந்த நிதி ஆண்டில், பள்ளிக் கல்வித்துறைக்காக தமிழக அரசு 27 ஆயிரத்து 205 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. தமிழகத்தில் லேப்டாப் வாங்க தகுதியான ஆசிரியர்களின் எண்ணிக்கை மட்டும் 2.9 லட்சம் ஆகும். இதில் முதல் நிலையாக 29 ஆயிரம் ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு லேப்டாப்பின் விலையும் ரூ. 12 ஆயிரம் ஆகும். மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்ட்கள் வழங்கப்பட உள்ளது. டிஜிட்டல் முறையில் கற்றலுக்கு மட்டுமின்றி, தமிழக அரசு ரூ. 721 கோடி ரூபாய் வரை, பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம், கழிவறைகள், சுத்தமான குடிநீர், சுகாதரமான சமையல் அறைகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்ய அந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஆசிரியர்கள் சொத்து கணக்கு: தமிழக பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு