சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டை சரிசெய்ய, பால் உற்பத்தியாளர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால்கிடைக்கவில்லை என்றும், பல பகுதிகளில் தாமதமாக கிடைப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அதன்படி, கடந்த 4 நாட் களாகவே சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, பால் வழங்க மறுத்து உற்பத்தியாளர்கள் நடத்தி வரும் போராட்டமும், அம்பத்தூர் ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும்தான் ஆவின் பால் தட்டுப்பாட்டுக்கு காரணமாக கருதப்படுகிறது.
ஆவின் பால் பயன்பாடு தவிர்க்கமுடியாதது. குழந்தைகளுக்குகூட ஆவின் பால் வழங்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் நிலையில், தட்டுப்பாடின்றி உரிய காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டியது கட்டாயம்.
எனவே, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு, ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்", என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜி.கே.வாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழகத்தில்அனைத்து தரப்பு மக்களின் அத்தியாவசிய தேவையாக ஆவின்பால் இருக்கிறது. அதில் தட்டுப்பாடு ஏற்படுவது சாதாரண மக்களுக்கு ஏற்படுகிற அன்றாட சிரமமாகும்.
எனவே, சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு, தேக்கம், அதற்கான காரணங்களை உடனே ஆராய்ந்து, அவற்றைசரிசெய்ய வேண்டியது அரசின்கடமை. இதற்காக பால் உற்பத்தியாளர்களுடன் அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்", என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil